மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் மாணவர் டெல்லியில் மர்மச்சாவு


மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூர் மாணவர் டெல்லியில் மர்மச்சாவு
x
தினத்தந்தி 17 Jan 2018 11:30 PM GMT (Updated: 17 Jan 2018 9:17 PM GMT)

டெல்லி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 56). இவர் காங்கேயம் ரோட்டில் சாய ஆலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (48). இவர்களுடைய மகன் சரத்பிரபு (24) எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு, டெல்லியில் உள்ள குருதேக் பகதூர் மருத்துவமனையுடன் இணைந்த யூ.சி.எம்.எஸ். (யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ்) மருத்துவ கல்லூரியில் எம்.டி. (பொது மருத்துவம்) முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு அருகில் உள்ள தில்ஷாத் கார்டன் பகுதியில் அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சரத்பிரபுவுடன் தங்கியிருந்த நண்பர் அரவிந்த் என்பவர் செல்வமணியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, சரத்பிரபு கழிவறையில் தவறி விழுந்துவிட்டதாக அரவிந்த் தெரிவித்துவிட்டு, இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமணி மீண்டும் அரவிந்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், சரத்பிரபு தவறி கீழே விழுந்து விட்டதாகவும், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

சரத்பிரபு திடீரென மர்மமான முறையில் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் திணறினர். பின்னர் சரத்பிரபுவின் தந்தை செல்வமணியும், உறவினர்கள் சிலரும் விமானம் மூலம் உடனடியாக டெல்லிக்கு விரைந்து சென் றனர்.

கடந்த மாதம் உறவினர் மரணத்திற்காக திருப்பூர் வந்திருந்த சரத்பிரபு, சில நாட்கள் சொந்த ஊரில் இருந்துவிட்டு மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் செல்போனில் பேசினார். நேற்று முன்தினம் இரவும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியாக பேசி உள்ளார்.

இந்த நிலையில் அவர் திடீரென்று இறந்திருப்பது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தகவல் அறிந்து செல்வமணியின் வீட்டுக்கு வந்த திருப்பூர் மத்திய போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், டெல்லி போலீசாரை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலைமைகளை கண்காணித்து வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தான் தங்கி இருந்த வீட்டின் கழிவறையில் மயக்க நிலையில் கிடந்த மாணவர் சரத்பிரபு குருதேக் பகதூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த தகவலை தொடர்ந்து டெல்லி ஷாகதரா பகுதி துணை போலீஸ் கமிஷனர் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், ஆனால் அவருடைய அறையில் சில ஊசி சிரிஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றை மருத்துவர்களிடம் போலீசார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இறந்து போன மாணவரின் உடலில் விஷத்தன்மை கொண்ட மருந்து ஏதேனும் ஊசி வழியாக ஏற்றப்பட்டிருக்கலாம் அல்லது வேறு மருந்து அதிக அளவில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் மரணம் நேரிட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சரத்பிரபுவின் உடலில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்து ஊசி வழியாக ஏற்றப்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

டெல்லி அரசின் சுகாதார துறை சிறப்பு மருத்துவர்கள் குழு இன்று (வியாழக்கிழமை) மாணவர் சரத்பிரபுவின் உடலை பிரேதபரிசோதனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மர்மமான முறையில் இறந்த சரத்பிரபு எஸ்.எஸ்.எல்.சி. வரை ஊட்டியில் உள்ள லாரன்ஸ் பள்ளியிலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை ராசிபுரத்தில் உள்ள எஸ்.ஆர்.வி.மெட்ரிக் பள்ளியிலும் படித்தார். படிப்பில் சிறந்த மாணவராக விளங்கிய அவர் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,187 மதிப்பெண் பெற்றார். பின்னர் எம்.பி.பி.எஸ். படிப்பை கோவையில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்தார்.

எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்ததும் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு வருடம் ‘நீட்’ தேர்வுக்காக பயிற்சி பெற்றார். பின்னர் நீட் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் சரத்பிரபுவுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மற்றும் டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ். மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது.

இதில் டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவ கல்லூரியில் எம்.டி. பொது மருத்துவத்தை தேர்வு செய்த சரத்பிரபு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் எம்.எஸ். படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்ற மாணவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் தனக்குத் தானே விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நடந்த மறுபிரேத பரிசோதனையில் கொலைக்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரியவந்தது. பின்னர், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. மாணவர் சரவணனின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து, ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் டெல்லி போலீசார் சரவணனின் மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு டெல்லி போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது.

மாணவர் சரவணனை தொடர்ந்து, இப்போது மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story