மாணவர்களின் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், கலெக்டர் உத்தரவு


மாணவர்களின் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகளின் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேனி,

பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேனி மாவட்டத்தில் பணியாற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் தேனி மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.5 சதவீதமாக இருந்தது. 2016-17-ம் கல்வியாண்டில் இது 97.1 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல், பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வில் 2015-16-ம் கல்வியாண்டில் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 95.1 சதவீதமாக இருந்தது. 2016-17-ம் கல்வியாண்டில் 95.9 சதவீதமாக அதிகரித்தது.

மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய பணியாகும்.

எழுத்துத்திறன் தேர்வு, வாசிப்புத்திறன் தேர்வுகள் அவ்வப்போது நடத்தி மாணவ, மாணவிகளின் திறனை வெளிப்படுத்த வேண்டும். பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளின் திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும், மாவட்டத்தை மாநில அளவில் முதன்மையான மாவட்டமாக கொண்டு வரவேண்டும் என்பதனையும் கருத்தில் கொண்டு அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story