பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்


பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறப்பு: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 10:15 PM GMT (Updated: 17 Jan 2018 8:00 PM GMT)

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மூலம் அணைக்கு தண்ணீர் கிடைக்கும் என்று பொதுப்பணித்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் மள, மளவென குறைந்தது. இதனையடுத்து வைகை பாசனப்பகுதிகளில், முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, சில தினங்கள் மட்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் போதிய நீர்வரத்து இல்லாததால், வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 44 அடியாக குறைந்து விட்டது. தற்போது உள்ள தண்ணீர் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டது.

இந்தநிலையில் வைகை அணையில் இருந்து நேற்று காலை முதல் மீண்டும் வினாடிக்கு 960 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் வைகை அணை நீர்மட்டம் மேலும் குறையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் குடிநீருக்காக வைகை அணையை நம்பியுள்ள மதுரை மாநகராட்சி மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப்பகுதிகளில் கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 44.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 

Next Story