மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை


மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை
x
தினத்தந்தி 18 Jan 2018 3:30 AM IST (Updated: 18 Jan 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

மாநில சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ரவுடிகளை ஒடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சித்தராமையா ஆலோசனை


கர்நாடக மாநில உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூரு நிரூபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டம் இன்றும் (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் உள்துறை மந்திரி ராமலிங்கரெட்டி, தலைமை செயலாளர் ரத்னபிரபா, உள்துறை மந்திரியின் ஆலோசகர் கெம்பையா, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்தும், விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பு, கடலோர மாவட்டங்களில் நடைபெறும் மதக்கலவரங்களை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி சித்தராமையா விரிவாக ஆலோசித்தார். பின்னர் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குற்றங்கள் குறைந்துள்ளன

ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் போதும் கடந்த ஆண்டில் மாநிலத்தில் எந்த விதமான குற்றங்கள் நடந்தன?, சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது? உள்ளிட்டவை குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதன்படி, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். கடந்த 2017-ம் ஆண்டில் கர்நாடகத்தில் குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. அதாவது 2016-ம் ஆண்டை காட்டிலும் ஒரு சதவீதம் குறைந்திருக்கிறது. அந்த குற்றங்கள் இன்னும் அதிகளவு குறைய வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

முக்கியமாக பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன். பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை தடுக்கவும், அதில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன்.

உளவுப்பிரிவுக்கு தனி போலீசார்

போலீஸ் துறையில் உளவுப்பிரிவு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். உளவுப்பிரிவில் பணியாற்றும் போலீசார் தங்களுக்கு தண்டனையாக, அந்த பிரிவில் வேலை பார்க்க பணி இடமாற்றம் செய்திருப்பதாக நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் சரியாக வேலை செய்வதும் இல்லை. இதனால் உளவுப்பிரிவில் மட்டும் பணியாற்றுவதற்காக தனியாக போலீசார் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த பிரிவில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட எந்த பிரிவுக்கும் பணி இடமாற்றம் செய்யப்பட மாட்டார்கள். உளவுப்பிரிவிலேயே அந்த போலீசார் பணியாற்ற வேண்டும். அவர்களுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். நவீன தொழில் நுட்பம் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும்.

போலீஸ் அதிகாரிகளே பொறுப்பு

குற்றங்கள் நடைபெற்ற பின்பு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் எந்த ஒரு குற்றமும் நடைபெறும் முன்பு தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும். உதாரணமாக மங்களூருவில் சமீபத்தில் தீபக் ராவ், பசீர் ஆகியோர் கொலை செய்யப்பட்டார்கள். போலீசார் முன் எச்சரிக்கையுடன் இருந்திருந்தால், அந்த 2 கொலைகள் நடைபெறுவதை தடுத்திருக்கலாம்.

ஒரு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகள் யார்?, சங்கிலி பறிப்பு திருடர்கள் யார்?, கொள்ளையர்கள் யார்? என்பது அந்த போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும். எந்த போலீஸ் நிலைய பகுதிகளில் குற்றங்கள் நடக்கிறதோ, அதற்கு அந்த போலீஸ் அதிகாரிகளே முழு பொறுப்பு ஆவார்கள்.

ரவுடிகளை ஒடுக்க வேண்டும்

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன். மாநிலத்தில் 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் எது பதற்றமானவை என்பதை கண்டறிந்து, அங்கு கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமித்து தீவிரமாக கண்காணிக்கும்படி தெரிவித்துள்ளேன். வாக்காளர்கள் எந்த விதமான பயமும் இன்றி ஓட்டுப்போட்டு செல்ல வேண்டும். எனவே சட்டசபை தேர்தலுக்காக முன் எச்சரிக்கையாக அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குற்ற சம்பவங்கள் நடைபெறுவது குறைய வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும். பொதுமக்களின் அமைதியை கெடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், குறிப்பாக ரவுடிகளை ஒடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளேன். ரவுடிகளால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது.

மதவாதிகளே காரணம்

மதவாதிகளை கண்காணித்து, தேவைப்பட்டால் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படியும் போலீசாருக்கு தெரிவித்துள்ளேன். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக உள்ளது. அரசியல் காரணங்களுக்கு அரசு மீது குற்றச்சாட்டு கூறுவது தான் எதிர்க்கட்சிகளின் வேலை ஆகும். மங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களில் மதக்கலவரங்கள் ஏற்படுவதற்கு மதவாதிகளே காரணம்.

மதவாதிகள் இருக்கும் வரை மதக்கலவரங்கள் நடக்கத்தான் செய்யும். அதனால் தான் மதவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவப்பிரசாரங்கள் செய்பவர்கள் மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, தான் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, ஷோபா எம்.பி. மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

Next Story