இரும்புதாது எடுத்ததில் முறைகேடா? குமாரசாமியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது மந்திரி வினய் குல்கர்னி பேட்டி


இரும்புதாது எடுத்ததில் முறைகேடா? குமாரசாமியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது மந்திரி வினய் குல்கர்னி பேட்டி
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

இரும்புதாது எடுத்ததில் முறைகேடு என கூறிய குமாரசாமியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று மந்திரி வினய் குல்கர்னி கூறினார்.

பெங்களூரு,

இரும்புதாது எடுத்ததில் முறைகேடு என கூறிய குமாரசாமியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று மந்திரி வினய் குல்கர்னி கூறினார்.

கர்நாடக மாநில கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறை மந்திரி வினய் குல்கர்னி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உண்மைக்கு புறம்பானது


சட்டவிரோதமாக இரும்பு தாது எடுத்ததில் முறைகேடு நடந்து இருப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டி இருக்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் அவர் இவ்வாறு பேசுகிறார். அவருடைய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. 2 தனியார் நிறுவனங்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு இரும்பு தாது எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் வரை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரும்பு தாதுவை குறைவாக எடுத்துள்ளன.

இரும்பு தாது உற்பத்தி குறைந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். விசாரணை புத்தகத்தில் 15 லட்சம் டன் என்பதற்கு பதிலாக 20 லட்சம் டன் என்று தவறாக குறிக்கப்பட்டுவிட்டது. இதுதான் குழப்பங்களுக்கு முக்கிய காரணம். இதன் அடிப்படையில் குமாரசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மணல் இறக்குமதி

கடந்த 3 ஆண்டுகளில் 1.20 கோடி டன் இரும்பு தாது உற்பத்தி செய்து இருக்க வேண்டும். ஆனால் அதில் 50 சதவீதம் அளவுக்கு தான் இரும்பு தாது உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இரும்பு தாது குறைவாக உற்பத்தி செய்திருக்கும்போது, அதிகமாக எப்படி எடுத்திருக்க முடியும்?. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு கப்பலில் 50 ஆயிரம் டன் மணல் இறக்குமதி செய்யப்படும். இதுபோல் ஒரு மாதத்தில் 3 முறை மணல் கப்பலில் கொண்டுவரப்படும். மணல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்க கோரி 7 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இறக்குமதி செய்யப்படும் மணலை விட செயற்கை மணல் விலை குறைவாக இருக்கிறது.

இவ்வாறு மந்திரி வினய் குல்கர்னி கூறினார்.

Next Story