உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி தேர்வு இன்று அதிகாலை பொறுப்பு ஏற்கிறார்


உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி தேர்வு இன்று அதிகாலை பொறுப்பு ஏற்கிறார்
x
தினத்தந்தி 18 Jan 2018 3:00 AM IST (Updated: 18 Jan 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யா தீஷ சுவாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பொறுப்பு ஏற்கிறார்.

மங்களூரு,

உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யா தீஷ சுவாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பொறுப்பு ஏற்கிறார்.

கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகர்


கர்நாடக மாநிலம் உடுப்பி டவுனில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிருஷ்ணன் கோவில் உள்ளது. கடந்த 1522-ம் ஆண்டு முதல் உடுப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 மடங்களை சேர்ந்த மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் பூஜை செய்யும் தலைமை அர்ச்சகராக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 8 மடங்களை சேர்ந்த மடாதிபதிகளில் ஒருவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அவர் 2 ஆண்டுகள், கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக செயல்படுவார். அதன் பின்னர் புதிய தலைமை அர்ச்சகர் தேர்வு நடைபெறும்.

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக பெஜாவர் மடத்தின் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி பதவி ஏற்றார். அவரது பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைதொடர்ந்து கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகர் தேர்வு செய்யும் கூட்டம் நேற்று காலை கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் விசுவேஸ்வர தீர்த்தசுவாமி உள்பட 8 மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் கலந்துகொண்டனர்.

மடாதிபதி வித்யாதீஷ சுவாமி தேர்வு

இந்த கூட்டத்தில், கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக பாலிமார் மடத்தை சேர்ந்த மடாதிபதி வித்யாதீஷ சுவாமி தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பொறுப்பு ஏற்கிறார். அவரிடம் விசுவேஸ்வர தீர்த்த சுவாமி பொறுப்புகளை ஒப்படைக்க உள்ளார்.

இதையொட்டி இன்று அதிகாலை கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் புதிய தலைமை அர்ச்சகரான வித்யாதீஷ சுவாமி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். இதையொட்டி உடுப்பி கிருஷ்ணன் கோவில் விழாக்கோலம் பூண்டு உள்ளது. மேலும் பக்தர்களும் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

5 தடவை பதவி


பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்த சுவாமி, கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக 5 தடவை பதவி வகித்துள்ளார். இந்த கோவிலில் ஒரு தடவை தலைமை அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர், மீண்டும் 14 ஆண்டுகளுக்கு பிறகு தான் அந்த பொறுப்புக்கு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story