சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க மந்திரிசபை முடிவு


சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க மந்திரிசபை முடிவு
x
தினத்தந்தி 18 Jan 2018 2:45 AM IST (Updated: 18 Jan 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளதாக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

பெங்களூரு,

சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்க மந்திரிசபை முடிவு செய்துள்ளதாக மந்திரி ஜெயச்சந்திரா கூறினார்.

109 கைதிகள் விடுதலை


கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி ஜெயச்சந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகளில் ஆண்கள் 105 பேரும், பெண்கள் 4 பேரும் என மொத்தம் 109 கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பெலிகெரே உள்பட 9 துறைமுகங்களில் இரும்புதாது மாயமானது. 50 ஆயிரம் டன் இரும்புதாது முறைகேடு செய்யப்பட்டது. சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து லோக்அயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டே அறிக்கை வழங்கினார். அதன் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது.

சிறப்பு விசாரணை குழு

ஆனால் சி.பி.ஐ. அமைப்பு போதிய ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையை பாதியிலேயே கைவிட்டது. போதிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணையை சி.பி.ஐ. அமைப்பு ரத்து செய்தது ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. எனவே, இரும்புதாது மாயம் மற்றும் சட்டவிரோத கனிம சுரங்க முறைகேடுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கனிம சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், அத்தகையவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் எஸ்.ஐ.டி. அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரில் அதிநவீன மருத்துவமனை கட்ட தொழில் அதிபருக்கு 25 ஏக்கர் நிலம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.

ஜனார்த்தனரெட்டிக்கு சிக்கல்

மந்திரிசபையின் இந்த முடிவு மூலம், கனிம சுரங்க முறைகேடுகள் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பா.ஜனதா சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story