பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்தது விசாரணைக்கு உத்தரவு


பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்தது விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2018 4:30 AM IST (Updated: 18 Jan 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தானே,

பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த மின்சார ரெயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெயில் தீப்பிடித்தது


தானே ரெயில்நிலையம் அருகே உள்ள பணிமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மின்சார ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் நேற்று அதிகாலை 1.45 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனம், 2 தண்ணீர் டேங்கர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 30 நிமிடம் போராடி ரெயிலில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மின்சார ரெயிலின் ஒரு பெட்டி முற்றிலும் எரிந்தது.

மின்கசிவு காரணம்?

நள்ளிரவு நேரம் என்பதால் ரெயில் நிறுத்தப்பட்ட இடத்தில் யாரும் இல்லை. எனவே இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பகல் நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும். தீ விபத்து குறித்து தானே மாநகராட்சி அதிகாரி சந்தோஷ் கதம் கூறியதாவது:-

30 நிமிடங்களில் ரெயிலில் பிடித்த தீயை அணைத்தோம். விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ரெயில் தனது கடைசி சேவையை முடித்த பின் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அதிக வெப்பத்தினால் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணைக்கு உத்தரவு

இது குறித்து மத்திய ரெயில்வே மும்பை கோட்ட மேலாளர் எஸ்.கே.ஜெயின் கூறுகையில், “இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகளை கொண்ட கமிட்டி இந்த விசாரணையை நடத்தும்” என்றார்.

Next Story