கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை


கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Jan 2018 4:15 AM IST (Updated: 18 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை உயிரோடு எரித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

திருக்கோவிலூர் தாலுகா வடமருதூர் கத்தாழன்திட்டு கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மகன் தங்கராசு (வயது 28), டிராக்டர் டிரைவர். தி.அத்திப்பாக்கத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகள் வசந்தி (25). உடல் ஊனமுற்றவர். இவரை காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராசு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி (6) என்ற மகளும், மணிகண்டன் (3) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக தி.அத்திப்பாக்கத்தில் உள்ள மாமனார் வீட்டில் தங்கராசு தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவ்வப்போது தங்கராசு தனது சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது தங்கராசுவிற்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த விஷயம் வசந்திக்கு தெரியவரவே, அவர் தனது கணவரிடம் தட்டிக்கேட்டார். இதனால் வசந்திக்கும், தங்கராசுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

மேலும் வசந்தியுடன் வாழ விரும்பாத தங்கராசு, மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததோடு விவாகரத்து செய்ய கையெழுத்து போடுமாறு கேட்டு தகராறு செய்து வந்தார். கடந்த 7.8.16 அன்று வசந்தியிடம், விவாகரத்து செய்ய வெள்ளைத்தாளில் கையெழுத்து போடுமாறு கேட்டு தங்கராசு தகராறு செய்தார். அதற்கு கையெழுத்து போட வசந்தி மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கராசு, ஊனமுற்ற மனைவி என்றுகூட பாராமல் வசந்தியின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த தீக்காயமடைந்த வசந்தியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மறுநாள் காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் நீதிபதி ஜூலியட்புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட தங்கராசுவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து தங்கராசு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுந்தரமூர்த்தி ஆஜரானார். 

Next Story