சென்னை புத்தக கண்காட்சியில் ‘தினத்தந்தி’ அரங்குக்கு நடிகர் சிவகுமார் இன்று வருகிறார்


சென்னை புத்தக கண்காட்சியில் ‘தினத்தந்தி’ அரங்குக்கு நடிகர் சிவகுமார் இன்று வருகிறார்
x
தினத்தந்தி 18 Jan 2018 4:30 AM IST (Updated: 18 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் ‘தினத்தந்தி’ பதிப்பகம் அரங்குக்கு இன்று நடிகர் சிவகுமார் வருகிறார்.

சென்னை,

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 41-வது சென்னை புத்தக கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இந்த புத்தக கண்காட்சி வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது.

இதில் 56 மற்றும் 57-ம் எண் அரங்குகளில் தினத்தந்தி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் வரலாற்று சுவடுகள், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட தினத்தந்தி வெளியீடுகள், 10 சதவீத கழிவு தொகையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நடிகர் சிவகுமார் வாழ்க்கை வரலாற்றை, ‘ஓவியர், நடிகர், பேச்சாளர் சிவகுமார்’ என்ற தலைப்பில் தினத்தந்தி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அவர் தனது திரையுலக அனுபவங்களையும், அவர் வரைந்த ஓவியங்களின் பின்னணிகளையும் சுவையாக சொல்கிறார்.

இந்த நூலை எழுத்தாளர் ‘வணங்காமுடி’ தொகுத்து வழங்கியுள்ளார். சென்னை புத்தக கண்காட்சியில் இந்த நூலை வாங்கும் வாசகர்களுக்கு நடிகர் சிவகுமார், அந்த புத்தகங்களில் கையெழுத்திட்டு வழங்குகிறார். இதற்காக அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு தினத்தந்தி பதிப்பக அரங்குக்கு வருகிறார். மாலை 6 மணி வரை தனது புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டு வழங்குவார்.

வெ.இறையன்பு எழுதிய புத்தகங்களை வாங்கும் வாசகர்களுக்கு மகிழ்ச்சி அடையும் வகையில், ‘தினத்தந்தி’ பதிப்பகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு புத்தக கண்காட்சியில் நேற்று செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை இறையன்பு எழுதிய புத்தகங்களை வாங்கிய வாசகர்களுக்கு தன்னுடைய கையொப்பமிட்டு வழங்கினார்.

இறையன்புவிடம் புத்தகம் வாங்குவதற்காக நேற்று ‘தினத்தந்தி’ பதிப்பகம் அரங்கில் வாசகர்கள் அதிகளவில் குவிந்தனர். அப்போது அவருடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுக்க பலரும் ஆர்வம் காட்டினர். அவரும் வாசகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.

பின்னர், புத்தகங்கள் குறித்து வெ.இறையன்பு ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

சில புத்தகங்கள் நம்மை முலாம் பூசும். சில ரசவாதம் நடத்தும். வாழ்க்கையில் குழம்பி தவிக்கும்போது குழல் விளக்காய் வழிகாட்டும் புத்தகங்களும் இருக்கின்றன. புத்தகங்கள் தொல்லைகளை உச்சரிக்காத துணை. நம்மை ஒரு போதும் நச்சரிக்காத தோழமை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story