கொடுங்கையூரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு


கொடுங்கையூரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 20 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:19 PM GMT (Updated: 2018-01-18T03:49:30+05:30)

தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்ற போது இந்த திருட்டு சம்பவம் நடந்து உள்ளது.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் லட்சுமி அம்மன் நகர் மீனாட்சி சாலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 40). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைபேசி நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி.

கணவன்-மனைவி இருவரும் கடந்த 13-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊரான செய்யாறுக்கு சென்று விட்டனர்.

நேற்று முன்தினம் இரவு அதிகாரி தனது மனைவியுடன் சென்னை திரும்பி வந்தார். அப்போது தங்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்த புகாரின்பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story