இரட்டை கொலை வழக்கில் திருப்பம் தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்


இரட்டை கொலை வழக்கில் திருப்பம் தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்தவர் அளித்த வாக்குமூலத்தால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையை ஏவி அந்த 2 பேரையும் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சீதப்பாலை சேர்ந்த புனேஷ்மணி (வயது 35), இவரது நண்பர் ஷைன் என்ற ஷாஜி ஆகிய இருவரும் கடந்த 3-ந்தேதி சீதப்பால் மலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், புனேஷ்மணியின் தம்பி சல்மான்சிங் கொலைக்கு பழிவாங்க காத்திருந்தபோது, எதிர்தரப்பினர் இந்த இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் கோர்ட்டில் சீதப்பால் கிராமத்தை சேர்ந்த கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் (38) சரண் அடைந்தார்.

அவரை குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் கோர்ட்டில் ஆரல்வாய்மொழி போலீசார் மனு அளித்தனர். கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கிட்டுவை நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு போலீசார் அழைத்து வந்து, பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கிட்டுவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் மனு செய்தனர். அதை ஏற்று கிட்டுவை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அதன்பேரில் கிட்டுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்போது தூத்துக்குடியை சேர்ந்த கூலிப்படையை ஏவி, ஆரல்வாய்மொழி அருகே மலைப்பகுதியில் புனேஷ்மணி, அவருடைய நண்பர் ஷைன் ஆகிய 2 பேரை தீர்த்துக்கட்டியதாக கிட்டு போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சல்மான்சிங் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த நான் சீதப்பாலில் டீக்கடை நடத்தி வந்தேன். அப்போது, புனேஷ்மணி ஒருநாள் செல்போனில் என் தம்பியை கொலை செய்த உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று என்னை மிரட்டினார். இதனால் பயந்த நான் உயிர் தப்பிக்க வேலூருக்கு சென்று டிரைவராக வேலை பார்த்தேன்.

அப்போது, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை சந்தித்தேன். அவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபோதுதான் புனேஷ்மணி என்னை கொலை செய்ய அவரை அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் நான், புனேஷ்மணி தருவதாக கூறிய பணத்தை விட அதிகமாக தருகிறேன், புனேஷ்மணியை தீர்த்துக்கட்டிவிடு, என்று கூறினேன், அவரும் சம்மதித்தார்.

அதன்பிறகு அவரும், அவரது கூட்டாளியும் சேர்ந்து புனேஷ்மணியை ரகசியமாக கண்காணித்தனர். சம்பவத்தன்று சீதப்பால் மலையில் படுத்திருந்த புனேஷ்மணி மற்றும் அவரது நண்பர் ஷைன் ஆகிய 2 பேரையும் கொன்றனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கொலை வழக்கில் துப்புதுலக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்து கூலிப்படையை சேர்ந்த 2 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த 2 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

Next Story