ஒகி புயலில் பலியான மேலும் 2 மீனவரின் உடல்கள் அடையாளம் தெரிந்தது


ஒகி புயலில் பலியான மேலும் 2 மீனவரின் உடல்கள் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் பலியான குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 மீனவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது.

கொல்லங்கோடு,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந்தேதி ஒகி புயல் வீசியது. இதில் குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஏராளமானவர்கள் மாயமானார்கள். இதில் பலர் உயிரிழந்தனர்.

புயலுக்கு பின் கேரள கடற்கரையில் ஏராளமான உடல்கள் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கேரள அரசு டி.என்.ஏ. என்ற மரபணு பரிசோதனை நடத்தி மீனவர்கள் உடலை அடையாளம் காண நடவடிக்கை எடுத்தது. இதற்காக மாயமான மீனவர்களின் உறவினர்களின் ரத்தமாதிரிகளை கொண்டு மீனவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில மீனவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மேலும் 2 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. நீரோடி கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்பின்(வயது 38). இவர், கேரள மாநிலம் நீண்டகரையில் தங்கியிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்தார். வெளிப்புற என்ஜின் பொருத்திய வள்ளத்தில் கிறிஸ்பின் உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, ஒகி புயலில் சிக்கி அவர்கள் 5 பேரும் மாயமானார்கள்.

இந்தநிலையில் நீரோடியை சேர்ந்த கிறிஸ்பின், தூத்தூரை சேர்ந்த கில்பர்ட்(62) ஆகியோரது உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இதுபற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் உடலை வாங்க சென்றுள்ளனர்.

கிறிஸ்பினுக்கு, அம்பிகா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதேபோல், ஏற்கனவே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த மீனவர் ஜான் டேவிட்சன்(வயது 36) உடல் நேற்று குளச்சல் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் கொண்டு செல்லப்பட்டு திருப்பலி நடைபெற்றது. பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜான் டேவிட்சனுக்கு மரியடெல்பின் என்ற மனைவியும், டேலின் ஜின்டோ, டேனிஷ் புரூனோ என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். 

Next Story