தொழில்நுட்பக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர், எம்.ஜி.ஆர். வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் புகழாரம்


தொழில்நுட்பக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியவர், எம்.ஜி.ஆர். வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் புகழாரம்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

“தொழில்நுட்பக் கல்வியில், எம்.ஜி.ஆர். புரட்சியை ஏற்படுத்தினார்” என்று வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

சென்னை, 

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையை அடுத்த மேலக்கோட்டையூர் வி.ஐ.டி. வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 7 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழாவுக்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம்பிள்ளை வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சிலையை திறந்து வைத்தார். வி.ஐ.டி. சென்னை வளாக உதவித் துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர்கள் வி.சங்கர் விசுவநாதன், வி.சேகர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மொரிஷியஸ் நாட்டின் துணை அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி பேசியதாவது:-

உயர்கல்வி வளர்ச்சி

அரசியல், கலைத் துறைகளில் சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். சமூக வளர்ச்சிக்காக, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் நலனுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். உயர்கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

மொரிஷியஸ் நாட்டில் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களால் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. தமிழ்மொழி கற்றுத்தர போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் மொரிஷியசில் தங்கள் கிளைகளை தொடங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

பொறியியல் கல்வி ஏற்படுத்திய மாற்றம்

எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் தொழில்நுட்பக் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார். அந்த காலக்கட்டத்தில், தமிழகத்தில் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. பொறியியல் கல்வி பயில வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை இருந்தது. தமிழகத்தில் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்க அவர் அனுமதி வழங்கிய காரணத்தால் தான், இன்றைக்கு 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உருவெடுத்துள்ளன.

லட்சக்கணக்கான பொறியாளர்கள் தமிழ்நாட்டில் இருந்து உருவாகி வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். பொறியியல் கல்வி உலக அளவில் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. நாட்டில் பொறியியல் கல்வியில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு வித்திட்டவர் எம்.ஜி.ஆர்.

கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும்

நாட்டில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த 14 கோடி பேருக்கு உயர்கல்வி பயில வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், 40 ஆயிரம் கல்லூரிகள், 800 பல்கலைக்கழகங்கள் மூலம் 3½ கோடி பேருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கின்றது. ‘நீட்’ தேர்வு மூலம் வெற்றி பெற்ற 7 லட்சம் பேரில் 56 ஆயிரம் பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து அங்கீகாரம், உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் உள்ள கட்டுப்பாடுகளைக் கைவிட வேண்டும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிடும் வகையில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய அரசு முன்வர வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் உயர்கல்வி நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. எனவே, உயர்கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில், எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் கல்விக் குழும வேந்தர் ஐசரி கே.கணேஷ், சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனத்தின் வேந்தர் என்.எம்.வீரய்யன், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி தலைவர் ஏ.என்.ராதாகிருஷ்ணன், கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி வேந்தர் கே.ஸ்ரீதரன், சென்னை சத்யபாமா கல்வி மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் வேந்தர் மரியஜரினா ஜான்சன், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜெ.ரெஜினா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story