தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் மீது வழக்கு


தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 19 Jan 2018 3:30 AM IST (Updated: 19 Jan 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த போது கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை,

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சண்முகபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38). என்ஜினீயர். இவருடைய மகன் விஷ்ணுவுக்கு (4½ வயது) அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து கோவை ராம்நகரில் உள்ள எஸ்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக விஷ்ணு அனுமதிக்கப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் இடதுபக்க சிறுநீரகம் சிறியதாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் விஷ்ணுவுக்கு அந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் சிறுவனுக்கு வயிற்றுவலி சரியாக வில்லை. மேலும் அவன் நடக்க முடியாமலும், சிறுநீர் கழிக்க முடியாமலும் அவதிப்பட்டான்.

இதனால் அதே ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்தபோது சிறுநீரகம் வீங்கி இருப்பது தெரியவந்தது. இதற்கு மாத்திரை சாப்பிட்டால் வீக்கம் குறைந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அதன்படி மாத்திரை சாப்பிட்டும் சிறுவனுக்கு வலி குறையவில்லை

இதனால் வினோத்குமார், விஷ்ணுவை மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது சிறுநீரகம் அருகே துணி மற்றும் பஞ்சு இருப்பதும், அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் கவனக்குறைவாக அவற்றை வயிற்றுக்குள் வைத்து தைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் வயிற்றில் இருந்த துணி, பஞ்சு ஆகியவற்றை அகற்றினார்கள்.

தனது மகன் விஷ்ணுவுக்கு கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த ராம்நகரை சேர்ந்த எஸ்.ஜி.ஆர். ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வினோத்குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவை சந்தித்து புகார் செய்தார். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி காட்டூர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராம்நகரில் உள்ள எஸ்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியை நடத்தி வந்த டாக்டர் வினோத் மற்றும் டாக்டர்கள் தர்மேந்திரா, கண்ணதாசன் ஆகிய 3 பேர் மீது காட்டூர் போலீசார் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story