தேர்தல் கூட்டணி குறித்து தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை? மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில்


தேர்தல் கூட்டணி குறித்து தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை? மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில்
x
தினத்தந்தி 18 Jan 2018 9:30 PM GMT (Updated: 2018-01-19T02:41:31+05:30)

தேர்தல் கூட்டணி குறித்து தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என்பதற்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு,

தேர்தல் கூட்டணி குறித்து தேவேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? என்பதற்கு மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதில் அளித்துள்ளார்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி


பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில், ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிவராஜ் பட்டீல், மானப்பா வஜ்ஜல் ஆகியோர் நேற்று எடியூரப்பா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய மந்திரியும், கர்நாடக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ்கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து இன்னும் நிறைய பேர் எங்கள் கட்சிக்கு வரத்தயாராக உள்ளனர். இந்த காங்கிரஸ் அரசு ஊழல்களை செய்துள்ளது. வளர்ச்சி பணிகள் எதையும் செய்யவில்லை. மத்தியில் மோடி ஆட்சி உள்ளது. கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்.

இவ்வாறு ஒரே கட்சியின் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமைந்தால் இன்னும் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்ய முடியும். இந்த வகையில் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரிக்க தயாராக உள்ளனர். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தேர்தல் கூட்டணி குறித்து நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.

நாங்கள் எதுவும் பேசவில்லை

ரெயில்வே திட்டங்கள் தொடர்பாக என்னை சந்திக்க தேவேகவுடா விருப்பம் தெரிவித்தார். அவர் முன்னாள் பிரதமர் என்பதால் அவருக்கு மதிப்பளித்து நானே அவருடைய வீட்டிற்கு சென்று சந்தித்து மனு பெற்றேன். நாட்டின் உயர்ந்த பதவியை வகித்தவருக்கு உரிய மரியாதை வழங்க வேண்டியது எனது கடமை.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சந்திக்க நினைத்தாலும், அவரை நானே போய் சந்திப்பேன். தேர்தல் கூட்டணி குறித்து தேவேகவுடாவுடன் நாங்கள் எதுவும் பேசவில்லை. அவ்வாறு வெளியான தகவல் தவறானது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவது உறுதி. ஊழல் இல்லாத, நேர்மையான ஆட்சி நிர்வாகத்தை எடியூரப்பா நடத்துவார்.

இவ்வாறு மத்திய மந்திரி பியூஸ்கோயல் கூறினார்.

Next Story