விருத்தாசலம் என்ஜினீயரை மணந்த ஸ்பெயின் நாட்டு பெண்


விருத்தாசலம் என்ஜினீயரை மணந்த ஸ்பெயின் நாட்டு பெண்
x
தினத்தந்தி 19 Jan 2018 12:30 AM GMT (Updated: 2018-01-19T02:49:33+05:30)

விருத்தாசலம் என்ஜினீயரை ஸ்பெயின் நாட்டு பெண் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

விருத்தாசலம்,

கடல் கடந்த இவர்களது காதல் கனிந்து விருத்தாசலத்தில் நடந்த இந்த திருமணம் குறித்த விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி. இவரது மனைவி சத்யபாமா. இவர்களது மகன் வசந்தராஜ் (வயது 29). இவர் சிங்கப்பூரில் என்ஜினீயரிங் படித்தார். பின்னர் ஸ்பெயின் நாட்டில் எம்.பி.ஏ. படித்துவிட்டு, தற்போது அங்கேயே சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்.

ஸ்பெயின் நாட்டின் தலை நகரான மேட்ரிட் நகரை சேர்ந்தவர் மார்க்கஸ்- வெலாஸ்கோ தம்பதியரின் மகள் பியத்திரிஸ்(29). எம்.எஸ்சி., படித்துள்ள இவர் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியை முடித்து விட்டு அங்கு சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தராஜின் தோழி மூலம் பியத்திரிஸ் அறிமுகமானார். ஆரம்பத்தில் வசந்தராஜ், பியத்திரிஸ் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடல் கடந்த இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டினர். இதனை தொடர்ந்து பியத்திரிஸ் இந்தியாவில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விரும்பினார். பின்னர் இவர்களது திருமணத்தை விருத்தாசலத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மணப்பெண் பியத்திரிஸ் உள்பட அவரது பெற்றோர், உறவினர்கள் 29 பேர் விருத்தாசலத்திற்கு வந்தனர். நேற்று அவர்களுக்கு விருத்தாசலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதில் மணப்பெண் பியத்திரிஸ் பட்டுசேலை கட்டி மணமேடைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு மணமகன் வசந்தராஜ், பெரியோர்கள் முன்னிலையில் மணப்பெண்ணான தனது ஸ்பெயின் நாட்டு காதலி பியத்திரிஸ் கழுத்தில் தாலி கட்டினார். அப்போது, அங்கு கூடியிருந்த உறவினர்கள் அவர் களை வாழ்த்தினர்.

இந்த காதல் மலர்ந்தது எப்படி என்பது பற்றி வசந்தராஜ் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோழியின் மூலமாக பியத்திரிஸ் எனக்கு தோழியானார். இந்த நட்பு நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. நான் தான் முதலில் என்னுடைய காதலை கூறினேன். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இருவரும் ஒருவாரம் இங்கு தங்கியிருந்துவிட்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று வாழ்க்கையை நடத்த உள்ளோம் என்றார்.

தொடர்ந்து மணமகள் பியத்திரிஸ் கூறியதாவது,  எனது காதலரை நான் மிகுந்த அளவில் நேசித்தேன். எங்களது திருமணம் இந்து முறைப்படி நடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் எங்களது திருமணம் நடந்தால் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. இங்கு தமிழ் கலாசாரப்படி மிகவும் சிறப்பாக எனது திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொரு சடங்குகள் நடக்கும் போது அதன் முறைகளும், அர்த்தங்களும் எனக்கும், எனது குடும்பத்திற்கும் மிகவும் பிடித்துவிட்டதால் ரசித்து அனுபவித்தோம். நான் இந்த திருமணத்திற்கு பிறகு தமிழ் பெண்ணாக வாழ ஆசைப்படுகிறேன். எனக்கு பாசம், அன்பை காட்டக்கூடிய மிகப்பெரிய குடும்பம் கிடைத்துள்ளது. இதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை. சில நாட்களில் தமிழை முழுவதும் கற்றுக்கொள்வேன். இங்கு செய்யப்படும் உணவுகள் மிகவும் பிடித்து விட்டது. அதனை ருசித்து சாப்பிடுவேன். எனது காதலர் எனக்கு கிடைத்திருப்பது இறைவன் கொடுத்த வரம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story