உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி பொறுப்பேற்றார்


உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி பொறுப்பேற்றார்
x
தினத்தந்தி 19 Jan 2018 3:15 AM IST (Updated: 19 Jan 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

மங்களூரு,

உடுப்பி கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக மடாதிபதி வித்யாதீஷ சுவாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

உடுப்பி கிருஷ்ணன் கோவில்

கர்நாடக மாநிலம் உடுப்பி டவுனில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 1522-ம் ஆண்டு முதல் உடுப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள 8 மடங்களை சேர்ந்த மடாதிபதிகளின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் பூஜை செய்யும் தலைமை அர்ச்சகராக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 8 மடங்களை சேர்ந்த மடாதிபதிகளில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் தான் 2 ஆண்டுகள் கிருஷ்ணன் கோவிலில் தலைமை அர்ச்சகராக செயல்படுவார்.

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு கிருஷ்ணன் கோவில் தலைமை அர்ச்சகராக பெஜாவர் மடத்தின் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இந்த நிலையில் கிருஷ்ணன் கோவிலின் புதிய தலைமை அர்ச்சகரை தேர்வு செய்யும் கூட்டம் நடந்தது. இதில், புதிய தலைமை அர்ச்சகராக பாலிமார் மடத்தின் மடாதிபதி வித்யாதீஷ சுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வித்யாதீஷ சுவாமி பொறுப்பேற்றார்

இந்த நிலையில் உடுப்பி கிருஷ்ணன் கோவில் புதிய தலைமை அர்ச்சகராக தேர்ந்தெடுக்கப்பட்ட வித்யாதீஷ சுவாமி நேற்று தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி பொறுப்புகளை ஒப்படைத்தார். முன்னதாக நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வித்யாதீஷ சுவாமி, உடுப்பி அருகே உள்ள ஜோடுகட்டே பகுதியில் இருந்து நீதிமன்ற சாலை, திரிவேணி சர்க்கிள், கனகதாசா ரோடு, ரதவீதி வழியாக கிருஷ்ணன் கோவிலை வந்தடைந்தார்.

அவர், மேள-தாளங்கள் முழங்க பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். இந்த பல்லக்கு உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்ததும் விசுவேஸ்வரா தீர்த்தசுவாமி, வித்யாதீஷ சுவாமியை வரவேற்றார். இந்த பல்லக்கு ஊர்வலத்தின்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித்யாதீஷ சுவாமியிடம் ஆசிப் பெற்றுக்கொண்டனர்.

பரியாய பூஜை

உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட வித்யாதீஷ சுவாமி, கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இதையடுத்து உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் பரியாய பூஜை நடைபெற்றது. அதில் வித்யாதீஷ சுவாமி கலந்துகொண்டு பரியாய பூஜைகளை தொடங்கி வைத்தார். நேற்று முதல் 2 ஆண்டுகளுக்கு அவர் தான் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் தலைமை அர்ச்சகராக செயல்படுவார். இதனையொட்டி நேற்று உடுப்பி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் குவிந்தனர். அங்கு டோல்லுகுனிதா, பேண்டுவாத்தியம், கேரளா செண்டை மேளம் ஆகியவற்றின் சத்தம் விண்ணை பிளந்தன. மேலும் வாணவேடிக்கையும் நிகழ்த்தப்பட்டது. இதையொட்டி உடுப்பியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

Next Story