சி.பி.ஐ. கைவிட்டதால் கனிம சுரங்க முறைகேடு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி


சி.பி.ஐ. கைவிட்டதால் கனிம சுரங்க முறைகேடு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 19 Jan 2018 3:31 AM IST (Updated: 19 Jan 2018 3:31 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.ஐ. கைவிட்டதால் கனிம சுரங்க முறைகேடு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரு,

சி.பி.ஐ. கைவிட்டதால் கனிம சுரங்க முறைகேடு குறித்து எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.

சித்தராமையா பேட்டி

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் உள்ள சுத்தூர் மடத்தில் கடந்த 13–ந்தேதி தொடங்கி திருவிழா நடந்து வருகிறது. இதன் இறுதிநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள முதல்–மந்திரி சித்தராமையா நேற்று காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் சுத்தூர் ஹெலிபேடு மைதானத்தில் வந்திறங்கினார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

எஸ்.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு

சட்டவிரோத கனிமசுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜனார்த்தன ரெட்டி மீது புகார் எழுந்தது. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடந்து வந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள், சரியான ஆவணங்கள் இல்லை எனக் கூறி சி.பி.ஐ. பாதியிலேயே கைவிட்டு விட்டது.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க சி.பி.ஐ. மறுத்ததால் தற்போது எஸ்.ஐ.டி. (சிறப்பு விசாரணை குழு) விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. எனக்கு சி.பி.ஐ., எஸ்.ஐ.டி. அமைப்புகள் மீது நம்பிக்கை உண்டு. ஆனால் முன்பு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது, பா.ஜனதாவினர் சி.பி.ஐ. அமைப்பு மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பதாக குற்றம்சாட்டினார்கள். ஆனால் இன்று மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு சி.பி.ஐ. அமைப்பை துஷ்பிரயோகம் செய்து வருகிறது. இப்போது சி.பி.ஐ. அமைப்பு பா.ஜனதாவினருக்கு நேர்மையானதாக தெரிகிறதா?.

பட்ஜெட்

கர்நாடக அரசின் 2018–ம் ஆண்டு பட்ஜெட் அடுத்த மாதம் (பிப்ரவரி) 16–ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடனும், அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளின் வரவு–செலவு கணக்குகளை சேகரித்து அதற்கு தகுந்தபடி திட்டங்கள், சலுகைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆன்மிகத்துடன் அரசியலை சேர்க்கக்கூடாது

பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா சுத்தூர் மட திருவிழாவில் கலந்துகொண்டு, விவசாய கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

சுத்தூர் மடம் ஆன்மிக சேவை மட்டுமின்றி ஏழை, எளிய மாணவ–மாணவிகளுக்கு கல்வியும், நிதி உதவியும் வழங்கி வருகிறது. சுத்தூர் மட திருவிழாவில் சாதி, மதத்துக்கு வழியில்லை. இது சமத்துவ விழா. இந்த விழாவில் அனைத்து மத, சாதியினரும் கலந்துகொண்டு வருகிறார்கள். சுத்தூர் மடத்தில் தரமான கல்வியுடன் ஆன்மிகமும் கற்றுத்தரப்படுகிறது. ஆன்மிகத்துடன் அரசியலை சேர்க்கக்கூடாது. மூடநம்பிக்கைகளை அனுசரிக்கக் கூடாது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். அத்தகைய பணியில் சுத்தூர் மடம் ஈடுபட்டு வருகிறது. இது பெருமையான செயலாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மந்திரி மகாதேவப்பா, மடாதிபதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story