பழனியில் அம்மா உணவக சமையலறையில் திடீர் தீ பெண் காயம்


பழனியில் அம்மா உணவக சமையலறையில் திடீர் தீ பெண் காயம்
x
தினத்தந்தி 18 Jan 2018 10:18 PM GMT (Updated: 2018-01-19T03:48:06+05:30)

அம்மா உணவக சமையலறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த பெண் ஒருவர் காயமடைந்தார்.

பழனி,

பழனி பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த விலையில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் மூலம் இங்கு உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 12 பெண்கள் சுழற்சி முறையில் வேலை செய்கின்றனர். அதன்படி நேற்று காலை 5.30 மணிக்கு மேல் 6 பெண்கள் அம்மா உணவக சமையலறையில் உணவு தயாரிக்கும் பணியை தொடங்கினர்.

அப்போது பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி கீதா (வயது 45) என்பவர் சமையல் கியாஸ் சிலிண்டரை அதற்கான டியூப் மூலம் அடுப்புடன் இணைக்க முயன்றார்.

அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் தீப்பற்றியது. இதனால் பதற்றமடைந்த கீதா அங்கிருந்து ஓட முயன்றார். அப்போது அவருடைய காலில் தீப்பிடித்து காயமடைந்தார். இதைப்பார்த்ததும் உடன் வேலை பார்த்த பெண்கள் ஓடிச்சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அவரை வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் தண்ணீரை ஊற்றி சிலிண்டரில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையே தீ சமையல் அறையில் பரவ தொடங்கியது. இதில் அங்கிருந்த பொருட்கள் சேதமாகின. பின்னர் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

படுகாயமடைந்த கீதா சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், கீதாவின் கால்களில் 27 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

Next Story