போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் உறுதி


போக்குவரத்து விதிகளை மீறினால் அபராதம் உறுதி
x
தினத்தந்தி 19 Jan 2018 4:39 AM IST (Updated: 19 Jan 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை நடுரோட்டில் நிறுத்தி விசாரிக்காமல் அபராதம் விதிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இதை சமாளிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும் விதிமீறல்களாலும் வாகன அதிகரிப்பாலும் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக இருந்து வருகிறது.

குறிப்பாக 2 சக்கர வாகனத்தில் 2-க்கும் மேற்பட்டவர்கள் செல்வது, செல்போனில் பேசிக்கொண்டே செல்வது போன்ற விதி மீறல்கள் தொடர்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை நிறுத்தி போலீசார் விசாரிக்கும்போது அவர்கள் வாக்குவாதம் செய்வதுடன் விரும்பத்தகாத செயல்கள் நடந்து விடுகின்றன.

சிலர் முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு சிக்னலில் பணியில் இருக்கும் போலீசாரை மிரட்டும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க புதுவை போக்குவரத்து போலீசார் புதிய வழியை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

அதாவது போக்குவரத்து விதிகளை மீறி செல்பவர்களை போலீசார் நடுரோட்டில் மடக்கி விசாரிப்பதோ, சோதனை செய்வதோ இனிஇல்லை. சம்பந்தப்பட்டவர்களின் வாகன எண்களை குறித்துக்கொண்டு அதன் மூலம் அவர்களின் வீட்டு விலாசத்துக்கு அபராத நோட்டீசுகளை அனுப்புகின்றனர்.

அந்த அபராத நோட்டீசுகளை பெறும் வாகன உரிமையாளர்கள் கோர்ட்டுக்கு சென்று அபராதம் செலுத்தித்தான் ஆகவேண்டும். நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் இதேபோல் 300 பேருக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டுள்ளன என்று போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறன் தெரிவித்தார்.

Next Story