கார் டிரைவர் கொலை: சேரன்மாதேவியில் 3-வது நாளாக பதற்றம் கடைகள் அடைப்பு; போலீசார் தீவிர ரோந்து


கார் டிரைவர் கொலை: சேரன்மாதேவியில் 3-வது நாளாக பதற்றம் கடைகள் அடைப்பு; போலீசார் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 20 Jan 2018 3:00 AM IST (Updated: 20 Jan 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக நேற்றும் பதற்றம் நீடித்தது. கடைகள் அடைக்கப்பட்டன.

சேரன்மாதேவி,

சேரன்மாதேவியில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக நேற்றும் பதற்றம் நீடித்தது. கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கார் டிரைவர் கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி வடக்கு 4-ம் தெருவை சேர்ந்த கணேசன் மகன் தங்க பாண்டி(வயது 22). கார் டிரைவரான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இது குறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், சேரன்மாதேவியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு செல்லையா என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக தங்க பாண்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே ஊரை சேர்ந்த நம்பிராசன்(19), சங்கர் என்ற சதீஷ்(23), கொம்பையா(25), ஆறுமுகம்(25) ஆகிய 4 பேர் மீது சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

கோர்ட்டில் வாலிபர் சரண்

இந்த நிலையில் நேற்று சேரன்மாதேவி கோட்டைவிளை தெருவை சேர்ந்த வேலு மகன் குமார்(23), நெல்லை மாவட்ட கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில், நேற்று மாலை 3.30 மணியளவில் தங்க பாண்டி உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை முடிக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு- போலீசார் ரோந்து


அவருடைய உடல் ஊர்வலமாக அவருடைய வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் தாமிரபரணி ஆற்றக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சேரன்மாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தங்க பாண்டி கொலை தொடர்பாக 3-வது நாளாக நேற்றும் சேரன்மாதேவியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பின்னர், போலீஸ் அதிகாரிகளை சந்தித்த தங்க பாண்டியின் உறவினர்கள், ‘கொலையாளிகளை விரைவாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாதவன், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவருவதாகவும், விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து 3-வது நாளாக அங்கு பதற்றம் நீடிப்பதால் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்னரசு, உதயகுமார், இன்ஸ்பெக்டர்கள் முத்து சுப்பிரமணியன், சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story