மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி மற்றொருவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jan 2018 2:00 AM IST (Updated: 20 Jan 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ஆறுமுகநேரி,

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து...

ஆறுமுகநேரி எல்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 54). திருச்செந்தூர் நத்தகுளத்தைச் சேர்ந்தவர் எட்வின் மகன் ஸ்டாலின் (28). இவர்கள் 2 பேரும் ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் தனியார் தொழிற்சாலையில் காவலாளிகளாக வேலை செய்தனர். நேற்று மாலையில் இவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்செந்தூரில் இருந்து ஆறுமுகநேரிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு ஆடு சாலையின் குறுக்காக பாய்ந்து ஓடியது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆசீர்வாதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்டாலின் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், போலீஸ் காரில் ஸ்டாலினை ஏற்றி சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த ஆசீர்வாதத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஆசீர்வாதத்துக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

கஞ்சா பதுக்கிய பெண் கைது

* தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் நாகூர்ஹனிபா. இவருடைய மனைவி லைலா பாத்திமா (43). இவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, லைலா பாத்திமா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ½ கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதுதொடர்பாக லைலா பாத்திமா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

* மதுரை சோலை அழகுபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (27). இவர் அங்குள்ள இரும்பு கேட் தயாரிக்கும் ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 15-ந்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். கோவில் வளாகத்தில் ஆறுமுகத்துக்கு திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டது. உடனே அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குலசேகரன்பட்டினம் கொத்துவா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மீரான் சாகிபு (60). இவர் நேற்று மாலையில் குலசேகரன்பட்டினம் சமத்துவபுரம் டாஸ்மாக் கடை அருகில் நடந்து சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார்.

* தூத்துக்குடி வடபாகம் போலீசார் ரோந்து சென்றபோது, கருத்தபாலம் சந்திப்பு பகுதியில் மது விற்றதாக தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (30) என்பவரையும், திரேஸ்புரத்தில் மதுவிற்றதாக மட்டக்கடையை சேர்ந்த எட்மண்ட் (38) என்பவரையும் கைது செய்தனர்.

Next Story