திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பயிற்சிக்கு வந்த ஆசிரியர் பயிற்றுனர்கள்


திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பயிற்சிக்கு வந்த ஆசிரியர் பயிற்றுனர்கள்
x
தினத்தந்தி 20 Jan 2018 2:45 AM IST (Updated: 20 Jan 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்றுக்கு வந்தனர்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த ஆசிரிய பயிற்றுனர்களில் இருந்து 500 பேர் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி பணிக்காக மாற்றப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி பணிக்கு மாற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. எனவே, பள்ளிக்கு ஆசிரிய பயிற்றுனர்களை மாற்ற வேண்டும், பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று ஆசிரிய பயிற்றுனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக கூட்ட அரங்கில், ஆசிரிய பயிற்றுனர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது ஆசிரிய பயிற்றுனர்கள் சிலர் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் பள்ளி பணிக்கு ஆசிரிய பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் பொதுமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படவில்லை. அதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகிறோம். அதன்படி பயிற்சி முகாமுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளோம் என்றனர்

Next Story