அரசின் சிறப்பு திட்டங்களால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு, கலெக்டர் ரோகிணி பேச்சு


அரசின் சிறப்பு திட்டங்களால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு, கலெக்டர் ரோகிணி பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2018 3:30 AM IST (Updated: 20 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

அரசின் சிறப்பு திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது என்று சேலத்தில் நடந்த தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம்,

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் குமரேஸ்வரன் வரவேற்றார். சேலம் தெற்கு தொகுதி சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, 517 பயனாளிகளுக்கு 4,136 கிராம் தங்கம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பெண்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது பெண் குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைக்கிறார்கள். இதன்மூலம் உயர்கல்வி படிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சி விகிதம் 23.6 சதவீதம் ஆகும். ஆனால் தமிழகத்தில் 44.8 சதவீதமாக உள்ளது. பெண் கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டில் ஒட்டு மொத்த பெண் கல்வி வளர்ச்சி 22.7 சதவீதம் ஆகும். ஆனால் தமிழக பெண்களின் கல்வி வளர்ச்சி 42.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. தன்னுடைய குழந்தைகளின் அறிவுக்கும், பண்பாட்டிற்கும் அடித்தளம் இடுபவர்களே ஒரு பெண் தான். கல்வி ஒரு மனிதனை அறிவு உடையவனாகவும், பண்பு உள்ளவனாகவும் மாற்றுகிறது.

பெண்களுக்கு நல்ல கல்வி அவசியம். அவ்வாறு இருந்தால் அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். பெண்கள் நலனை பாதுகாக்கும் வகையில் சமூக நலத்துறை மூலம் திருமண நிதியுதவித் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், இலவச தையல் எந்திரம் வழங்குதல், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஆண்களை விட பெண்களின் கல்வி கற்கும் சதவீதம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல் 2018 வரை 42 ஆயிரத்து 11 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 82 ஆயிரத்து 940 கிராம் தங்கமும், ரூ.148.97 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story