ஆத்தூர் அருகே நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ.4¼ லட்சம், 15 பவுன் நகை கொள்ளை


ஆத்தூர் அருகே நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரூ.4¼ லட்சம், 15 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 20 Jan 2018 4:15 AM IST (Updated: 20 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே பட்டப்பகலில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டில் கதவு தாழ்ப்பாளை உடைத்து ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர்.

ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் 13-வது வார்டு பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 44). நகராட்சி முன்னாள் கவுன்சிலர். இவர் ஆத்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு வாகனங்களுக்கு புகைபோக்கி கருவி பொருத்தும் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லதா. 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் வெளியூரில் தங்கி படித்து வருகிறார்கள். நேற்று காலை ரமேசும், லதாவும் வீட்டை பூட்டி விட்டு பட்டறைக்கு சென்று விட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரமேஷ் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் வீட்டு கதவு தாழ்ப்பாளை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அறையில் உள்ள பீரோவில் வைத்திருந்த ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டுக்கு சாப்பிட வந்த ரமேஷ் வீட்டு கதவு தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பணம் , நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. பீரோவில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. இதுகுறித்து ஆத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கேசவன் மற்றும் போலீசார், ரமேஷ் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பட்டப் பகலில் நடந்த இந்த அட்டகாசம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story