தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் கைது எதிரொலி: சேலம் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் கைது எதிரொலி: சேலம் பங்களாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 20 Jan 2018 3:15 AM IST (Updated: 20 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் கைது எதிரொலியாக சேலத்தில் உள்ள அவரது பங்களாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சேலம்,

தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் வரதராஜன், ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று பகல் கையும் களவுமாக தஞ்சையில் கைது செய்யப்பட்டார். வரதராஜனுக்கு சொந்த ஊர் சேலம் ஆகும். அவரது வீடு அய்யந்திருமாளிகை சிண்டிகேட் பேங்க் காலனியில் உள்ளது.

தரைத்தளம், முதல் தளத்துடன் சொகுசு பங்களா போல வீடு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்புதான் அந்த வீடு கட்டப்பட்டு, வீட்டை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பங்களா வீட்டில் இருந்தபடியே, வெளியே வருபவர்களை கண்காணிப்பதற்காக தனியாக நவீன கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. சேலம் பங்களா வீட்டில் வரதராஜனின் மனைவி சகிலா, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சகிலா அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப்பார்த்து வருகிறார்.

தஞ்சையில் லஞ்ச வழக்கில் வரதராஜன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சேலத்தில் உள்ள சொகுசு பங்களாவில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்காக புறப்பட்டு வந்தனர். ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் அடங்கிய குழுவினரும், அவர்களுக்கு உதவியாக சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினரும் நேற்று மாலை 6 மணிக்கு பங்களாவில் சோதனைக்காக சென்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைக்கு வந்ததை அறிந்து வீட்டில் உள்ள வரதராஜனின் மனைவி சகிலா மற்றும் மகன்கள் கண்ணீர் வடிக்க தொடங்கினர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், பங்களா வீட்டின் கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் தாழ்போட்ட பின்னர் அங்குலம் அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இரவு 10 மணிக்கு மேலாக நீடித்த இந்த சோதனையில் தஞ்சை மாநகராட்சி ஆணையாளர் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்களையும், பல்வேறு இடங்களில் வாங்கி குவித்த நிலப்பத்திரங்களையும் கைப்பற்றினர்.

மேலும் மதிப்பிட முடியாத வகையில் தங்கநகைகளும், ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருந்ததையும் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், அது தொடர்பாக குறிப்பு எடுத்து கொண்டு விசாரணையை தொடங்கினர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இரவு வேளையில் அமைதியான முறையில் சோதனை நடந்து வருவதால், அக்கம் பக்கத்தினருக்கு கூட இந்த விஷயம் தெரியவில்லை. 

Next Story