பெல்லந்தூர் ஏரி நுரையில் பயங்கர தீ புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதி


பெல்லந்தூர் ஏரி நுரையில் பயங்கர தீ புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 20 Jan 2018 3:30 AM IST (Updated: 20 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பெல்லந்தூர் ஏரி நுரையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு பெல்லந்தூர் ஏரி நுரையில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

பெல்லந்தூர் ஏரியில் தீ

பெங்களூரு பெல்லந்தூர் ஏரியில் அப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாக புகார் எழுந்தது. மேலும் கழிவுநீர் கலப்பதால் ஏரி தண்ணீரில் வெள்ளை நுரை உருவாகி கரைபுரண்டு ஓடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இதையடுத்து, பெல்லந்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. மேலும் ஏரியை சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் கலப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனாலும் ஏரியில் அவ்வப்போது வெள்ளை நுரை உருவாகி, அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளிலும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது பரந்து போய் விழும் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த நிலையில், நேற்றும் பெல்லந்தூர் ஏரியில் ஓடும் தண்ணீரில் வெள்ளை நுரை உருவானது. பின்னர் வெள்ளை நுரையில் திடீரென்று பயங்கரமாக தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென ஏரியில் பரவி இருந்த நுரையில் எரியத் தொடங்கியது. மேலும் ஏரியின் நடுவே இருந்த புற்கள், செடிகளுக்கும் தீ பரவியது. இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புகை மண்டலமாக மாறியது


உடனே சம்பவ இடத்திற்கு முதலில் 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து ஏரியில் பிடித்து எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள். ஆனால் ஏரியில் இருந்த வெள்ளை நுரையில் பிடித்த தீ அணையாமல் மற்ற பகுதிகளுக்கும், ஏரியையொட்டி கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் உள்ளிட்ட பொருட்களுக்கும், செடிகளுக்கும் பரவி தொடர்ந்து எரிந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக ஏரியில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மேலும் 10 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

அத்துடன் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படைவீரர்கள், ராணுவ பயிற்சி பெறும் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் நள்ளிரவு வரை தீயை அணைக்க முடியாமல் போனது. இதையடுத்து, பெல்லந்தூர் ஏரியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். அதே நேரத்தில் கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்ததால், ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் புகை மண்டலமாக மாறியதுடன், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். பெல்லந்தூர் ஏரியில் தீப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story