லோயர் பரேல் நவ்ரங் ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர் காயம்


லோயர் பரேல் நவ்ரங் ஸ்டூடியோவில் பயங்கர தீ விபத்து தீயணைப்பு வீரர் காயம்
x
தினத்தந்தி 20 Jan 2018 4:00 AM IST (Updated: 20 Jan 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

லோயர் பரேல் நவ்ரங் ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் காயமடைந்தார்.

மும்பை,

லோயர் பரேல் நவ்ரங் ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் காயமடைந்தார்.

ஸ்டூடியோவில் தீ

மும்பை லோயர் பரேல், தோடி மில் வளாகத்தில் நவ்ரங் ஸ்டூடியோ கட்டிடம் உள்ளது. 5 மாடிகளை கொண்ட இந்த பழமையான கட்டிடம் தற்போது காலியாக உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நவ்ரங் ஸ்டூடியோ கட்டிடத்தின் 5-வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் 15 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். எனினும் தீயணைப்பு துறையினர் அங்கு செல்வதற்குள், தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

தீயணைப்பு வீரர் காயம்


தீப்பிடித்த கட்டிடம் பழமையானது என்பதால் அது இடிந்து விழும் அபாயம் இருந்தது. எனவே தீயணைப்பு வீரர்கள் அந்த கட்டிடத்தினுள் நுழையவில்லை. அவர்கள் ஸ்டூடியோவிற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் இருந்தவாறு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட ஒர்லி தீயணைப்பு நிலைய வீரர் தினேஷ் பாட்டீல் என்பவருக்கு காலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக நாயர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

இந்தநிலையில் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் எரிந்த தீயை சுமார் 4½ மணிநேரம் போராடி அணைத்தனர். அதிகாலை 1 மணிக்கு பிடித்த தீ காலை 5.30 மணியளவில் தான் அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேலும் ஒட்டுமொத்த கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.

தீப்பிடித்த பழமையான ஸ்டூடியோ கட்டிடத்தில் என்ன பொருட்கள் இருந்தன?, எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தோடிமில், சமீபத்தில் தீ விபத்து நடந்து 14 பேர் பலியான கமலா மில் வளாகம் அருகே தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story