கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
x
தினத்தந்தி 20 Jan 2018 3:43 AM IST (Updated: 20 Jan 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு கிராமத்தில் உள்ள பஜார் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஆறுமுகம் (வயது 39) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அப்போது பஜாரில் உள்ள வீடுகளில் மின்வினியோகம் இருந்த நிலையில் தெருவிளக்குகள் அனைத்தும் எரியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த டாஸ்மாக் ஊழியர் ஆறுமுகம், தனது வீட்டுக்கு நேராக செல்லாமல் பஜார் தெருவிற்கு சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு உள்ள ஏ.டி.எம். மையத்தில் மட்டும் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் கையில் இரும்பு கம்பி மற்றும் கடப்பாரையுடன் 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே நின்று கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனை கண்ட டாஸ்மாக் ஊழியர் ஆறுமுகம், எதையும் கவனிக்காதது போல சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் ஏ.டி.எம்.மையம் நோக்கி வந்தார். அப்போது அந்த மையத்திலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு செல்போன் வெளிச்சம் மட்டும் தெரிந்தது. நள்ளிரவில் கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதை உணர்ந்த ஆறுமுகம், உடனடியாக அதே பகுதியில் அக்கப்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று தகவல் கூறி பொதுமக்களில் 4 பேரை தூக்கத்தில் இருந்து எழுப்பி அழைத்துக்கொண்டு மேற்கண்ட ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அவர்கள் பாதுகாப்புக்காக கையில் கட்டைகளை வைத்திருந்தனர்.

இதனை ஏ.டி.எம்.மையத்தின் உள்ளே இருந்து கவனித்த மர்ம நபர்கள் தங்களை நோக்கி பொதுமக்களில் சிலர் கட்டைகளுடன் வருகிறார்கள் என தெரிந்து கொண்டு உஷார் ஆனார்கள். இதனையடுத்து ஏ.டி.எம்.மையத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியை அவர்கள் கைவிட்டு அங்கிருந்து வெளியே ஓடினர். கொள்ளையர்களை பொதுமக்களில் சிலர் மடக்கி பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது மேற்கண்ட தெருவில் உள்ள மின்விளக்குகளுக்கான மின் இணைப்பை முன்கூட்டியே துண்டித்து விட்டு கொள்ளை முயற்சி சம்பவத்தில் மர்மநபர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாரை கொண்டு பெரும்பாலும் முழுமையாக உடைத்து விட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியரின் நடவடிக்கையால் சரியான நேரத்தில் பொதுமக்கள் அங்கு கூடியதால் இந்த கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது.

இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story