தாலாட்டு... திரும்புமா...?


தாலாட்டு... திரும்புமா...?
x
தினத்தந்தி 20 Jan 2018 11:30 AM IST (Updated: 20 Jan 2018 11:09 AM IST)
t-max-icont-min-icon

செம்மொழி தகுதி பெற்ற தமிழ், உலகளாவிய நிலையிலே உச்சத்தில் இருக்கிறது என்றால் மிகையல்ல. தமிழில் எத்தனையோ வகை இலக்கியங்கள் இருந்தாலும், எழுதா இலக்கியங்கள் வகையில் தாலாட்டும், ஒப்பாரியும் முதன்மை பெறுகின்றன.

தாலாட்டு பிறப்பையும், ஒப்பாரி இறப்பையும் சார்ந்தது. அதுவும் தாலாட்டு தனக்கென்ற ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

தாலாட்டு என்பது பெண்கள் பாடும் ஒரு பாட்டு. அவர்களின் சங்கேத மொழி குழந்தைகளுக்கு மட்டுமே புரியும். தால் என்றால் நாக்கு என்று அர்த்தம். நாக்கை ஆட்டி, ஆட்டிப் பாடுகின்ற ஒரு பாட்டு தான் தாலாட்டு. இந்த தாலாட்டு உறவுகளில் விரிசல் ஏற்படுத்தாமல் பாடுகின்ற பாட்டு. ஒவ்வொரு உறவையும் விழித்து பாடுகின்ற தன்மை உடையது.

ஆராரோ ஆரீராரோ-கண்ணே!
ஆராரோ ஆரீராரோ-உன்னை
யாரடிச்சு நீ அழத
அடிச்சாரைச் சொல்லி அழு
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூச் செண்டாலே!
அத்தை அடித்தாளோ
அரளிப்பூத் தண்டாலே
தாத்தா அடித்தாரோ
தாமரைப்பூத் தண்டாலே
பாட்டி அடித்தாளோ
பாலூட்டும் கையாலே!
சித்தி அடித்தாளோ
சிறுகீரைத் தண்டாலே
யாரடிச்சு நீ அழுத
அடிச்சாரைச் சொல்லி அழு!
நான் அவருக்கு
ஆக்கினைகள் செய்துவைப்பேன்
தொட்டாரைச் சொல்லி அழு
நான் அவருக்கு
தோள் விலங்கு மாட்டிடுவேன்!


இப்படி உறவுகளை ஒவ்வொன்றாக விழித்துத் தாய் பாடுகின்ற பொழுது, குழந்தைக்கு உளவியல் ரீதியாக இத்தனை உறவுகள் இருக்கிறதா? என்ற எண்ணம் மேலோங்கும்.

தாலாட்டில் தாயின் சகோதரனாகிய குழந்தையின் தாய் மாமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தங்கச் சங்கெடுத்தால்
புத்தி குறையுமென்று
வெள்ளிச் சங்கெடுத்தால்
வித்தை குறையுமென்று
நடுக்கடலில் மூழ்கி
நாராயணர் சங்கெடுத்துத்
தாய் மாமன் வாராண்டி!


சகோதரியின் குழந்தைகளுக்கு தனது சொத்தை வித்தாவது தாய் மாமன் சீர்கொண்டு வரவேண்டும் என்பது நியதி. மற்ற உறவுகளை விட தாய் மாமன் உறவும், அப்பாவுடன் கூடப் பிறந்த அத்தையின் உறவும் எப்போதும் அன்பின் சிகரமாகத் தான் இருக்கும். ஆக, தாலாட்டு குழந்தையை பக்குவப்படுத்துகிறது. தாய் அந்த குழந்தைக்குத் தாலாட்டு வாயிலாக மன தைரியத்தை ஊட்டுகிறாள். தாலாட்டில் தாய் பாடுகின்ற பாட்டெல்லாம் நெகிழ்வட்டில் பதித்தது போல், குழந்தையின் மூளையில் பதிந்து அது பெரிய ஆளாக மாறி விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் தாலாட்டு என்பதில் அய்யம் இல்லை.

-முனைவர் ராம.கண்ணன்

Next Story