அரசு கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை


அரசு கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2018 4:00 AM IST (Updated: 21 Jan 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் சிதம்பரம் அருகே அரசு கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரங்கிப்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓடப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் கவுசல்யா(வயது 21). இவர் சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி விடுதியில் தங்கி பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிகுந்த மன வேதனையுடன் காணப்பட்ட அவர் நேற்று காலையில் விடுதியில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியில் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, தாசில்தார் உலகஅனந்தன் மற்றும் கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கிருந்த மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் கவுசல்யா தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தபோது, அவர் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் நானும் ஓடப்பேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த நிலையில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். இதனை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கவுசல்யா எழுதியிருந்தார்.

இதையடுத்து கவுசல்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story