பல்லாரி அருகே பரபரப்பு மத்திய மந்திரியின் காரை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம்


பல்லாரி அருகே பரபரப்பு மத்திய மந்திரியின் காரை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2018 3:30 AM IST (Updated: 21 Jan 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் காரை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு,

பல்லாரி அருகே மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் காரை முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெரு நாய்கள் குறைப்பது பற்றி கவலையில்லை என மீண்டும் அவர் சர்ச்சையாக பேசியுள்ளார்.

கார் முற்றுகை

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. இவர், தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார். சமீபத்தில், மதசார்ப்பற்றவர்கள் பெற்றோர் யார் என தெரியாதவர்கள் எனவும், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் எனவும் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசி இருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், நேற்று காலையில் பல்லாரி புறநகரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைக்க மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே சென்றார்.

அப்போது அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று கூறியதை கண்டித்து தலித் அமைப்பை சேர்ந்தவர்கள் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் காரை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

வேலைவாய்ப்பு முகாம்

உடனே ஸ்ரீராமுலு எம்.பி. அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானமாக பேசினார். ஆனால் அவர்கள், மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் காரை முற்றுகையிட்டு தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானமாக பேசி, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை, ஸ்ரீராமுலு அழைத்து சென்றார். பின்னர் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பேசியதாவது:-

மீண்டும் சர்ச்சை பேச்சு

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி பேர் வேலை கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க பிரதமர் ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளார். அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவு நனவாக வேண்டும்.

நாம் உண்மையான பிடிவாதக்காரர்கள். சாலையில் நடந்து செல்லும் போது தெரு நாய்கள் குரைப்பது பற்றி கவலைப்படக்கூடாது. அதுபற்றி சிந்தித்து தலைவலியை ஏற்படுத்தி கொள்ள விரும்பவில்லை. கன்னட மொழி தெரிந்தவர்கள் கன்னடத்தில் தான் பேச வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது அவர் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story