பெங்களூருவில் 9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்


பெங்களூருவில் 9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 21 Jan 2018 3:30 AM IST (Updated: 21 Jan 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், 9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில், 9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மாணவன் மீது தாக்குதல்

பெங்களூரு பொம்மசந்திராவில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவன் 14 வயது சிறுவன். சம்பவத்தன்று, இவனும், இன்னொரு மாணவனும் வகுப்பறையில் சண்டையிட்டு கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான வெங்கடேஷ் 9-ம் வகுப்பு மாணவனை கம்பால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால், மாணவன் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இதுபற்றி மாணவன் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளான். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் சம்பவம் குறித்து சூர்யா நகர் போலீசில் புகார் செய்தனர். புகாரில், மாணவன் மீது தாக்குதல் நடத்திய தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே, வெங்கடேஷ் தலைமறைவு ஆகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மேலும், இதுபற்றி ஆனேக்கல் வட்டார கல்வித்துறை அதிகாரி ரமேசிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

பிரச்சினை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சமீபத்தில் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றதும், அப்போது பாதிக்கப்பட்ட மாணவன் கொண்டு சென்ற செல்போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை தலைமை ஆசிரியர் வெங்கடேஷ் வாங்கி வைத்து கொண்டு கொடுக்க மறுத்ததும், இதன் காரணமாக மாணவனின் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியர் இடையே பிரச்சினை ஏற்பட்டதும் தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் மாணவனை, தலைமை ஆசிரியர் தாக்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story