சட்டசபை தேர்தலையொட்டி காங்., ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க முடிவு பா.ஜனதா தலைவர்கள் திட்டம்


சட்டசபை தேர்தலையொட்டி காங்., ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க முடிவு பா.ஜனதா தலைவர்கள் திட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2018 3:45 AM IST (Updated: 21 Jan 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க முடிவு செய்திருக்கும் பா.ஜனதா தலைவர்கள், ஆபரேஷன் தாமரையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பெங்களூரு,

சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை இழுக்க முடிவு செய்திருக்கும் பா.ஜனதா தலைவர்கள், ஆபரேஷன் தாமரையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி


கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள முதல்-மந்திரி சித்தராமையா, காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள். அதுபோல, பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் ஆட்சியை பிடிக்க வியூகங்களை வகுத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாக தென் இந்தியாவில் காலூன்ற கர்நாடகம் தான் பா.ஜனதாவுக்கு நுழைவு வாயில் என்பதால், நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் எடியூரப்பா பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்களை பா.ஜனதாவுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

10 எம்.எல்.ஏ.க்களை....

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யோகேஷ்வர், ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மானப்பா வஜ்ஜல், சிவராஜ் பட்டீல் ஆகிய எம்.எல்.ஏ.க்கள், அந்த கட்சிகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். அதுபோல, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க, அக்கட்சி தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகவும், அதுகுறித்து எம்.எல்.ஏ.க்களுடன் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த 18-ந் தேதி பெங்களூரு பா.ஜனதா அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயலுடன், எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆபரேஷன் தாமரை

மேலும் ஆபரேஷன் தாமரையை தீவிரப்படுத்த எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும், இதன் மூலம் பூத் மட்டத்தில் இருந்து மாநில அளவில் பிற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்களை பா.ஜனதாவில் சேர்த்து கட்சியின் பலத்தை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

எடியூரப்பா தலைமையில் நடைபெற்று வரும் மாற்றத்திற்கான யாத்திரையில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் விரைவில் கர்நாடகம் வர உள்ளனர். அப்போது அவர்கள் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பா.ஜனதாவில் இணைவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Next Story