மராட்டியத்தை உலுக்கிய ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை நாசிக் கோர்ட்டு தீர்ப்பு


மராட்டியத்தை உலுக்கிய ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை நாசிக் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Jan 2018 4:00 AM IST (Updated: 21 Jan 2018 3:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தை உலுக்கிய ஆணவ கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நாசிக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

நாசிக்,

மராட்டியத்தை உலுக்கிய ஆணவ கொலை வழக்கில், 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நாசிக் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

அகமத்நகர் மாவட்டம் சோனை கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் காரு (வயது 24). இவர் நேவசா பாடா பகுதியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்

மாணவியுடன் காதல்


இவருக்கும், இதே கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், சாதியை காரணம் காட்டி, இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தங்களது வீட்டின் கழிவு நீர்த்தொட்டியில் ஏற்பட்ட அடைப்பை அகற்ற வருமாறு சச்சின் காருவுக்கு அந்த பெண்ணின் தந்தை அழைப்பு விடுத்தார். இதனை நம்பிய அவர், தனது நண்பர்கள் சந்தீப் (25), ராகுல் (20) ஆகியோருடன் சென்றார்.

கொடூர கொலை

கழிவு நீர்த்தொட்டி அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட உறவினர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு, கடுமையாக தாக்க தொடங்கினர். மேலும், கூர்மையான ஆயுதங்களால் 3 பேரையும் கொடூரமாக வெட்டி சாய்த்தனர். இதனால், 3 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்கள். சச்சின் காருவை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை கழிவு நீர்த்தொட்டிக்குள் வீசினர்.

மராட்டியத்தையே உலுக்கிய இந்த ஆணவ கொலை சம்பவம், கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடைபெற்றது. அவர்களை கொடூரமாக கொலை செய்த ரகுநாத் (52), ரமேஷ் (42), பிரகாஷ் (38), கணேஷ் (23), மற்றொரு சந்தீப் (37) மற்றும் அசோக் நாவ்கிரே (32), அசோக் ரோகி தாஸ் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, நாசிக் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

6 பேர் குற்றவாளிகள்

இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்டோர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த 15-ந் தேதி தீர்ப்பு விவரத்தை நீதிபதி ஆர்.ஆர்.வைஷ்ணவ் அறிவித்தார்.

அதன்படி, போதிய ஆதாரங்கள் நிரூபணம் ஆகாததால், அசோக் ரோகி தாஸ் மட்டும் விடுவிக்கப்பட்டார். மற்ற 6 பேர் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

அரசு வக்கீல் வாதம்

அப்போது, குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு மனுதாரர் தரப்பு வக்கீல்கள் கேட்டுக் கொண்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் உஜ்வால் நிகம், “கொலையான சச்சின் காரு ஒரு அப்பாவி. அவரது கை, கால்களை 8 துண்டுகளாக வெட்டி, கழிவு நீர்த்தொட்டிக்குள் வீசும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர, அவரது நண்பர் ராகுலை கழிவுநீர்த்தொட்டியில் தள்ளியும், மற்றொருவரை தலையில் அடித்தும் கொலை செய்திருக்கின்றனர்” என்று வாதிட்டார்.

மேலும், இந்த குற்றச்செயலை அரங்கேற்றிய போது, குற்றவாளிகள் கொடூரமான மிருகத்தனத்தை வெளிப்படுத்தியதாக கூறிய அவர், இதற்காக அவர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தூக்கு தண்டனை


இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிபதி ஆர்.ஆர்.வைஷ்ணவ், குற்றவாளிகள் 6 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனையும், தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதில், பாதி தொகை பலியான வாலிபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story