பசிப்பிணி போக்கிய நெற்களஞ்சியம்


பசிப்பிணி போக்கிய நெற்களஞ்சியம்
x
தினத்தந்தி 21 Jan 2018 11:30 AM IST (Updated: 21 Jan 2018 11:07 AM IST)
t-max-icont-min-icon

அள்ள, அள்ள குறையாது உணவு பொருட்களை வாரி வழங்கிய சிறப்பு அமுத சுரபி பாத்திரத்துக்கு உண்டு.

அமுத சுரபி பாத்திரம் மூலம் பசி என்று வருவோருக்கு அன்னம் படைத்து உணவுகளை வாரி வழங்கினார் மணிமேகலை. அதே போல மகாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது திரவுபதி இதே அமுதசுரபி பாத்திரத்தின் மூலம் தன்னை நாடி வந்தவர்களுக்கு பசி பிணியை போக்கியதாக புராணம் கூறுகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை தரணியில் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட மாபெரும் குதிர் ஒன்று இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கிறது. நாட்டில் வறட்சி நிலவிய காலத்திலும், கொடும் பஞ்சம் தலைவிரித்தாடிய கால கட்டத்திலும் நெல்லை வாரி வழங்கி மக்களின் பஞ்சத்தை போக்கிய சிறப்பு இந்த நெற்குதிருக்கு உண்டு.

கி.பி. 16-ம் நூற்றாண்டு காலத்தில் மன்னர்கள் ஆட்சியில் இந்த மாபெரும் குதிர் அமைக்கப்பட்டது. நெற்குதிர் வட்டவடிவில், கற்கூரையோடு, முழுவதும் செங்கலால் கட்டப்பட்டுள்ளது. இந்த களஞ்சியத்தின் உள்பகுதி மற்றும் வெளிபகுதி பூசப்படவில்லை என்பது இந்த களஞ்சியத்திற்கு மேலும் சிறப்பை சேர்க்கிறது. இந்த அதிசய குதிர் 36 அடி உயரம் உள்ளது. இதன் சுற்றளவு 80 அடியாகும். களிமண் மூலம் செய்யப்பட்ட 5 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்களை சுட்டு சுற்றுச்சுவரை கட்டி உள்ளனர்.

இந்த அபூர்வ நெற்களஞ்சியம் (நெற்குதிர்) தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர், ரெகுநாத நாயக்கர் போன்ற நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது அமைச்சராக திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பலத்த மழை பெய்தாலும் உள்ளே வெள்ள நீர் புகாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த களஞ்சியம் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நெற்களஞ்சியத்தின் அடிப்பகுதி, மேற்பகுதி, நடுப்பகுதி என மொத்தம் 3 பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாயில் என 3 வாயில்கள் உள்ளன. முதலில் அடிப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதி வரை நெல் நிரம்பியவுடன், அதை அடைத்துவிட்டு, 2-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். அந்த வாயில் பகுதியும் நிரம்பியவுடன் 3-வது வாயில் வழியாக நெல்லை கொட்டுவார்கள். 3 வாயில்களும் நிரம்பினால் நெற்குதிர் நிரம்பிவிடும். சுமார் 3 ஆயிரம் டன் வரையிலான நெல்லை இந்த குதிரில் சேமிக்கலாம்.

ரெகுநாத நாயக்க மன்னர் கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்டார். அப்போது கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை சேமிக்க நெற்குதிர் ஒன்றை அமைக்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். மன்னரின் விருப்பத்தை அவரது அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் நிறைவேற்றி உள்ளார். பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் விளைந்த நெல்லை இந்த இந்த நெற்குதிரில் சேமித்து வைத்தனர். நாட்டில் பஞ்சம் ஏற்படும் போது இந்த நெற்குதிரை திறந்து அதிலுள்ள நெல்லை மக்களுக்கு வாரி வழங்கி மக்களின் பசிப் பிணியை போக்கினார், மன்னர். இதில் சேமிக்கப்படும் நெல் 5 வருடம் வரை கெட்டுப்போகாது.

1966-ம் ஆண்டு தொல்பொருள் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த அபூர்வ நெற்களஞ்சியம், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோவிலில் உள்ளது. இதேபோல தமிழகத்தில் உள்ள எண்ணற்ற கோவில்களில் நெற்களஞ்சியங்கள் மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்த நெற்களஞ்சியங்கள்அழிந்து விட்டன. ஆனால் 500 ஆண்டுகளை கடந்தும் இன்னும் கொஞ்சம் கூட பழமை மாறாமல் மன்னர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது, இந்த நெற்குதிர்.

-ஆர்.லெட்சுமணன்

Next Story