வெல்லும் வீராங்கனைகள்


வெல்லும் வீராங்கனைகள்
x
தினத்தந்தி 21 Jan 2018 2:30 PM IST (Updated: 21 Jan 2018 12:40 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதை பகுதியில் நடக்கும் அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு முதன் முறையாக பெண் வீரர்கள் சாகசங்களை நிகழ்த்த இருக்கிறார்கள். இதற்காக எல்லைப்பாதுகாப்பு படையை சேர்ந்த 113 பெண்கள் மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் 20 வயது முதல் 31 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அவர்களில் 15 பேருக்கு திருமணமாகி இருக்கிறது. அதில் ஒன்று, இரண்டு குழந்தைகளின் தாய்களும் அடக்கம். அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 20 பேர் மோட்டார் சைக்கிள் சாகச அணிவகுப்பில் இடம்பிடித்திருக்கிறார்கள். எல்லைப்பாது காப்பு படையின் துணை கமாண்டர் ரமேஷ் சந்திரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கே.எம்.கல்யானா ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள்.

குவாலியர் அருகில் உள்ள மத்திய வாகன போக்குவரத்து பள்ளியில் இந்த பெண் வீரர் களுக்கு தினமும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

‘‘வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்திற்கேற்ப இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அணிவகுப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் பெண் களின் மன தைரியம் போற்றுதலுக்குரியது.

கடினமான இந்த பணியை சவாலாக மேற்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒருவித பயத்துடன் இருந்தவர்களும் இப்போது துணிச்சலுடன் பயிற்சி பெற தொடங்கிவிட்டார்கள். தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் 5.30 மணி வரையும் தீவிர பயிற்சி மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பு பயிற்சியுடன் நுட்பமான விஷயங்களையும் கற்றுக்கொடுக்கிறோம்’’ என்கிறார், கல்யானா.

எல்லைப்பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் கே.கே.சர்மா, பெண் வீராங்கனை களின் சாசக அணிவகுப்பு முயற்சிக்கு வித்திட்டவர். இந்த பெண்களின் குழுவிற்கு ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் நூர்யங்க் தலைமை தாங்குகிறார். அவர், ‘‘மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வதை நினைத்து பயப்படவில்லை. எந்த சூழ்நிலையிலும் மோட்டார் சைக்கிளில் தைரியமாக நின்றுகொண்டு சாகசம் செய்ய முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலும், பயிற்சியும் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி இருக்கிறது. குடியரசு தின விழாவில் எங்களின் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு சாகசமும் இடம்பெறுவதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்’’ என்கிறார்.

Next Story