பஸ் கட்டண உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


பஸ் கட்டண உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jan 2018 2:00 AM IST (Updated: 22 Jan 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

நெல்லை,

பஸ் கட்டண உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. நேற்று நெல்லைக்கு வந்திருந்தார். அவர் மேலப்பாளையத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்

மனிதநேய ஜனநாயக கட்சி மிக வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் பஸ் கட்டணம் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த கட்டண உயர்வை பொதுமக்கள் தலையில் சுமத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப போக்குவரத்து கழக நஷ்டத்தை குறைக்கவும், பொதுமக்களின் சிரமத்தை போக்கவும் கட்டண உயர்வை சரி பாதியாக குறைக்க வேண்டும்.

ஹஜ் மானியம் ரத்து

மத்திய அரசு ஹஜ் புனித பயணத்துக்கு மானியத்தை ரத்து செய்திருப்பதன் மூலம் சிறுபான்மை விரோத போக்கை கடைபிடிக்கிறது. இதற்கு பதிலாக சிறுபான்மை சிறுமிகளுக்கு கல்வி நிதி வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. எனவே வருகிற மத்திய பட்ஜெட்டில் சிறுபான்மை குழந்தைகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலப்பாளையத்தில் சிறையில் இருப்போரின் குடும்பத்தினர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு வருகின்றனர். மேலப்பாளையத்தை பதற்றம் நிறைந்த இடமாக வைத்திருக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். இதை போலீசார் கைவிடாவிட்டால் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

உள்ளாட்சி தேர்தலையொட்டி வார்டு எல்லை மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. இதில் மேலப்பாளையத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளது. எனவே முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் மறுவரையறை செய்ய வேண்டும்.

முத்தலாக் சட்டத்தை எதிர்த்து பாராளுமன்ற மேலவையில் குரல் கொடுக்க காரணமாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பிற கட்சி எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட கட்சிகள்

தமிழகத்தை திராவிட கட்சிகளே ஆட்சி செய்ய வேண்டும். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்து பணியாற்ற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை ஜாதி, மதம் மற்றும் வழக்கு வேறுபாடு இன்றி விடுதலை செய்ய வேண்டும்.

வைரமுத்து கருத்து குறித்து பலரும், பல வகையில் விமர்சித்து வருகின்றனர். யாராக இருந்தாலும் நாவடக்கத்துடன் பேச வேண்டும். ஜாதி, மத வெறியை தூண்டி விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் இறக்குமதி

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு தமிழக அரசு விதித்துள்ள 11 கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டை போக்க முடியும்.

இவ்வாறு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறினார்.

பேட்டியின் போது தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில செயலாளர் தைமியா, மாவட்ட நிர்வாகிகள் இக்பால், உசேன், சுல்தான் கனி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story