கோவில்பட்டியில் துணிகரம் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நகைகள் திருடிய பெண் கைது


கோவில்பட்டியில் துணிகரம் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நகைகள் திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 22 Jan 2018 2:15 AM IST (Updated: 22 Jan 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கருவறைக்குள் புகுந்து அம்மன் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் கருவறைக்குள் புகுந்து அம்மன் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

கருவறைக்குள் புகுந்த பெண்

கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வழக்கம்போல் நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளை சாமிநாத பட்டர், சங்கர பட்டர் ஆகியோர் செய்தனர். பூஜைகள் முடிந்த பின்னர், அவர்கள் கருவறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

அப்போது நைசாக ஒரு பெண் கோவில் கருவறைக்குள் சென்று விட்டார். பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்து விட்டு சாமிநாத பட்டர் மீண்டும் கோவில் கருவறைக்குள் சென்றபோது, அங்கு பெண் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அந்த பெண்ணிடம், நீங்கள் இங்கு எல்லாம் வரக்கூடாது என்று கூறினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அந்த பெண் கருவறையில் இருந்து வெளியே ஓடினார்.

சாமி நகைகள் திருட்டு

இதை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் காவலாளிகள் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த பெண், செண்பகவல்லி அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி கொடி மற்றும் வெள்ளி சங்கிலியில் கோர்க்கப்பட்ட திருமாங்கல்யம், 3 தங்க பொட்டு ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. அதில் வெள்ளி நகைகள் 107 கிராம், தங்கம் 11 கிராம் ஆகும்.

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் ராஜனுக்கும், கோவில்பட்டி கிழக்கு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனந்தகிருஷ்ணன், குருசந்திரவடிவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த பெண் கழுகுமலை முல்லைநகரை சேர்ந்த அருள்செல்வம் மனைவி சண்முகசுந்தரி (வயது 37) என்பதும், அவர் மீது கழுகுமலை, குருவிகுளம் போலீஸ் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார், சண்முகசுந்தரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கோவிலில் கருவறைக்குள் புகுந்து சாமி நகைகளை துணிகரமாக திருடிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story