‘ஆசைவார்த்தை கூறி என் மனைவியை அழைத்து வந்ததால் கொன்றேன்’ கைதானவர் வாக்குமூலம்


‘ஆசைவார்த்தை கூறி என் மனைவியை அழைத்து வந்ததால் கொன்றேன்’ கைதானவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 22 Jan 2018 4:15 AM IST (Updated: 22 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஆசைவார்த்தை கூறி என் மனைவியை அழைத்து வந்ததால் கொலை செய்தேன் என்று வடமாநில வாலிபர் கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கத்துவார் பகுதியை சேர்ந்தவர் சோனு என்கிற ராஜ் (வயது 27). இவர் ஈரோடு தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு சலவை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த மாதம் 26-ந் தேதி வீட்டில் கழுத்து அறுபட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்ட அன்று இரவு அவருடன் ஒரு ஆணும், கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும் தங்கி இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் இறந்த ராஜூவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து கொலையாளிகளை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். அப்போது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒருவர் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த சில நாட்களாக அந்த செல்போன் எண் ‘சுவிட்ச்ஆப்’பில் இருந்தது.

இந்த நிலையில் அந்த செல்போன் எண்ணை வைத்திருப்பவர் கோவை ரெயில் நிலையம் அருகில் நிற்பதாக நேற்று சிக்னல் காட்டியது. அதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது ஒரு பெண்ணும், ஆணும் அங்கு நின்று கொண்டு இருந்தனர்.

உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் பிஜ்ஜையா தாலுகா பர்சோட்டாலா கிராமத்தை சேர்ந்த ரேவதாஸ் சாரிவான் (28), ஆர்த்தி (23) என்பதும், கணவன் -மனைவியான இவர்கள் 2 பேரும் சேர்ந்து ராஜூவை கொலை செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ரேவதாஸ் சாரிவான் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

நானும், என்னுடைய மனைவி ஆர்த்தியும் கேரளாவில் உள்ள ஒரு ஏலக்காய் எஸ்டேட்டில் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தோம் அப்போது எங்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் எனது மனைவி கோபித்து கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் மத்திய பிரதேசத்தில் இருந்து கேரளா வருவதற்காக என்னுடைய மனைவி ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அந்த ரெயிலில் வந்த ராஜூ எனது மனைவியிடம் ஆசைவார்த்தை கூறி ஈரோட்டிற்கு அழைத்து சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து நான் எனது மனைவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அவர் ஈரோட்டில் இருப்பதாக கூறினார். அதனால் நான் எனது மனைவியை அழைத்து செல்வதற்காக ஈரோடு வந்தேன்.

அப்போது என்னுடைய மனைவி என்னுடன் வர தயாராக இருந்தும், ராஜூ அனுப்ப மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதனால் சம்பவத்தன்று இரவு நாங்கள் 2 பேரும் சேர்ந்து ராஜூவுக்கு மது கொடுத்தோம். அவருக்கு போதை ஏறிய பின்னர் ராஜூவின் காலை எனது மனைவி பிடித்துக்கொண்டார். நான் கத்தியை வைத்து அவருடைய கழுத்தை அறுத்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பின்னர் நாங்கள் 2 பேரும் கேரளாவுக்கு தப்பி சென்று விட்டோம்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்துக்கு செல்வதற்காக கோவை ரெயில் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்தபோது போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு ரேவதாஸ் சாரிவான் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.


Next Story