உறைந்த கோள்களில் ‘ஏலியன்கள்’?


உறைந்த கோள்களில் ‘ஏலியன்கள்’?
x
தினத்தந்தி 22 Jan 2018 1:43 PM IST (Updated: 22 Jan 2018 1:43 PM IST)
t-max-icont-min-icon

துருவப் பனிமலைகள் ‘நுண்ணுயிரற்ற இடமல்ல’ என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று நம் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். ஆனால், கூடி வாழ்தல் என்று வரும்போது நாம் மனிதர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஆபத்தான கண்ணோட்டம் மக்களிடையே உள்ளது. புலிகள், காண்டாமிருகம், சில வகை பறவைகள் என மிருகங்கள் வேட்டையாடப்பட்டதாலும், மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பினாலும் சில விலங்குகள் மாண்டு விரைவாக மறைந்தும் போய்க்கொண்டே இருக்கின்றன. ‘கூடி வாழ்தல்’ என்பதை ‘உலகின் அனைத்து உயிரினங்களுடன் கூடி வாழ்வதே’ என்பதை மனிதர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, இனி அப்படிச் செயல்பட்டாலும் அழியப்போகும் பூமியைக் காக்க முடியாது. மாறாக, வேறு கிரகம் தேடித்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் மனித இனமும் அழியும் என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள் விஞ்ஞானிகள். ஆனால், வேறு கிரகம் என்று யோசித்தாலும், அங்கும் கூடி வாழ்தல் என்பதைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அது சரி, வேற்று கிரகத்தில் யாருடன் கூடி வாழ்வது? என்று யோசிக்கிறீர்களா? வேறு யாரோடு, நம்ம ‘ஏலியன்’களோடு தான்.

ஆனால், ஏலியன்களைத்தான் நாம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லையே? உண்மைதான். ஆனால், ஏலியன் எந்தெந்த கிரகங்கள், நிலவுகளில் எந்த மாதிரியான சுற்றுச்சூழலில் இருக்கக்கூடும் என்பது தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தகைய நோக்கத்தில் நடந்த ஒரு ஆய்வில், உலகின் தென் மற்றும் வட துருவங்களில் (Arctic and Antarctic regions) உள்ள, பல நூற்றாண்டுகளாய் ஐஸ் பாறைகளாக இருக்கும் பகுதிகளில் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் வாழக்கூடும் என்று கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெல்லி ரெடெக்கர் தலைமையிலான ஆய்வாளர்கள்.

‘துருவ ஐஸ் பாறைகளில் உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை’ என்றுதான் இதுவரை உறுதியாக நம்பப்பட்டு வந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம், கோடிக் கணக்கான ஆண்டுகளாக முழுக்க ஐஸ் பாறைகளாக உறைந்துபோய் கிடக்கும் சில கிரகங்களில் ஏலியன் உயிர்கள் வாழக்கூடும் என்று கருதுகிறார்கள் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள். துருவப் பனிமலைகளில் நுண்ணுயிரிகள் இருக்கின்றனவா அன்று ஆய்வு செய்தபோது, சில நுண்ணுயிரிகள் இருப்பதற்கான அறிகுறிகளும், அவற்றின் வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்ததற்கான அறிகுறிகளும் பனிமலையில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பனிமலையில் நுண்ணுயிரிகள் இருக்கின்றனவா என்று கண்டறிய, பனியில் உறைந்துபோய் இருக்கக்கூடிய வாயுக்களை, சோதனைக் கூடத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் ‘ட்ரீட்’ செய்யப்பட்ட துருவப் பனி மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். அல்ட்ரா வயலெட் கதிர்கள் நுண்ணுயிரிகளை அழித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வு முடிவில், அல்ட்ரா வயலெட் ட்ரீட்மெண்ட்டுக்கு உட்படுத்தப்படாத துருவப் பனிமலை மாதிரிகளில் கடல் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் ‘மீத்தைல் அயோடைட்’ (methyl iodide) எனும் வாயு அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது. பொதுவாக, உயிர்கள் வாழத் தகுதியில்லாத காரணத்தால் எந்த வேதியல் மாற்றத்துக்கும் உள்ளாகாத உயிர்கள் மற்றும் பண்டைய பருவநிலைகளை அப்படியே பாதுகாக்கும் இயற்கை பொக்கிஷமாகவே பனிமலைகள் இதுவரை கருதப்பட்டு வந்தன. ஆனால் அவற்றினுள் மீத்தைல் அயோடைட் இருப்பது நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆக, துருவப் பனிமலைகள் ‘நுண்ணுயிரற்ற இடமல்ல’ என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, எதிர்பாராத இடங்களில் உயிர்கள் கண்டறியப்படுவது இது முதல்முறையல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஏனெனில், அண்டார்டிக் பனிமலைக்குக் கீழே உள்ள மிகவும் ஆழமான பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் பனிக்கட்டிகள் ஆகிய பகுதிகளிலும் இதற்கு முன்னர் உயிர்கள் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது. ஆக, இதன் மூலம், உறைந்துபோய் உள்ள பல கோள்களில் உயிர்கள் வாழக்கூடும் என்று தற்போது விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

Next Story