வார்டு மறு வரையறைக்கு எதிர்ப்பு முகலிவாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


வார்டு மறு வரையறைக்கு எதிர்ப்பு முகலிவாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Jan 2018 4:30 AM IST (Updated: 23 Jan 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

வார்டு மறு வரையறையின் கீழ் முகலிவாக்கத்தின் சில பகுதிகளை மணப்பாக்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews

பூந்தமல்லி,

வார்டு மறு வரையறையின் கீழ் முகலிவாக்கத்தின் சில பகுதிகளை மணப்பாக்கத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி 12-வது மண்டலத்திற்குட்பட்டது முகலிவாக்கம். 156-வது வார்டாக செயல்பட்டு வரும் இந்த பகுதியின் முகலிவாக்கம் பெரிய காலனி, பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல பகுதிகளை, வார்டு மறு வரையின் கீழ் 157-வது வார்டான மணப்பாக்கத்தோடு இணைக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மணப்பாக்கம்-முகலிவாக்கம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியல் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து மனு அளிக்கும்படி கூறிய மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் இதுகுறித்து கூறியதாவது:-

இந்த பகுதியில் நாங்கள் பூர்வீகமாக வசித்து வருகிறோம். இதற்கு முன்பு முகலிவாக்கம் ஊராட்சியாக இருந்தது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தான் சென்னை பெருநகர மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது.

தற்போது அதில் இருந்து சில பகுதிகளை பிரித்து வேறு பகுதியுடன் சேர்ப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் வீட்டு வரி, குடிநீர் வரி போன்றவற்றை முகலிவாக்கம் பகுதியிலேயே நாங்கள் எந்தவித சிரமும் இன்றி கட்டி விடுகிறோம். ஆனால் மணப்பாக்கத்தோடு சேர்த்தால் நாங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியது இருக்கும். எனவே அரசு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

அரசு அதிகாரிகள் இதனை ஏற்க மறுத்தால் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்துவிட்டு அதிக மக்களை திரட்டி அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story