போலீஸ்காரர் மீது தாக்குதல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


போலீஸ்காரர் மீது தாக்குதல் வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jan 2018 4:15 AM IST (Updated: 23 Jan 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Bangalore #tamilnews

பெங்களூரு,

பெங்களூருவில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஆவலஹள்ளி அருகே அஞ்சனபுராவை சேர்ந்தவர் முனாவர் பாட்ஷா (வயது 37). இவர், கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி இரவு லால்பாக் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அங்கு வாகன சோதனையில் பசவனகுடி போக்குவரத்து போலீஸ்காரர்கள் ஈடுபட்டு இருந்தார்கள்.

அப்போது முனாவர் பாட்ஷா மதுஅருந்தி உள்ளாரா? என்று போலீஸ்காரர் சாந்த வீரண்ணா பரிசோதிக்க முயன்றார். உடனே அவரை, முனாவர் பாட்ஷா தாக்கிவிட்டு தப்பி சென்றார். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும் குடிபோதையில் போலீஸ்காரரை முனாவர் பாட்ஷா தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பசவனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் பாட்ஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களை கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்திருந்தார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி வெங்கண்ணா ஒசமணி தீர்ப்பு கூறினார். அப்போது போலீஸ்காரர் சாந்த வீரண்ணாவை முனாவர் பாட்ஷா தாக்கியது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அபராத தொகை ரூ.20 ஆயிரத்தில், ரூ.10 ஆயிரத்தை போலீஸ்காரர் சாந்த வீரண்ணாவுக்கு வழங்கும்படியும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story