ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மராத்தி நடிகர் பிரபுல் பலேராவ் பலி


ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மராத்தி நடிகர் பிரபுல் பலேராவ் பலி
x
தினத்தந்தி 23 Jan 2018 3:45 AM IST (Updated: 23 Jan 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மராத்தி நடிகர் பிரபுல் பலேராவ் பலியானார். #mumbai #tamilnews

மும்பை,

ஓடும் ரெயிலில் ஏற முயன்று கீழே விழுந்த மராத்தி நடிகர் பிரபுல் பலேராவ் பலியானார். இந்த சம்பவம் திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘குன்கு’ என்ற மராத்தி டி.வி. தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரபுல் பலேராவ் (வயது22). இதுதவிர ‘து மஜ்கா சங்கதி’, ‘நாகுஷி’, ‘ஜோதிபா புலே’ போன்ற பிரபல டி.வி. தொடர்களிலும் நடித்து இருந்தார்.

இவர் நடித்த ‘பரயன்’ என்ற மராத்தி திரைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. பிரபுல் பலேராவ் மும்பை கிர்காவ் பகுதியில் வசித்து வந்தார். மேலும் மலாடு பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு புறப்பட்டார். மலாடில் இருந்து மின்சார ரெயிலில் வீட்டிற்கு செல்ல இருந்தார். இதற்காக அதிகாலை 4.18 மணிக்கு மலாடு ரெயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது, சர்ச்கேட் செல்லும் ஸ்லோ ரெயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட தயாராக நின்றுகொண்டிருந்தது.

இதைப்பார்த்த பிரபுல் பலேராவ் அந்த ரெயிலை பிடிப்பதற்காக நடைமேம்பாலத்தில் ஏறி ஓடினார். எனினும் இவர் பிளாட்பாரத்திற்கு செல்வதற்குள் ரெயில் புறப்பட்டுவிட்டது.

இதையடுத்து பிரபுல் பலேராவ் ஓடும் ரெயிலில் ஏற முயன்றார். அப்போது, அவர் நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில், அவர் ரெயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான காட்சிகள் ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் கிடந்த நடிகர் பிரபுல் பலேராவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.வி. நடிகர் ரெயில் விபத்தில் பலியான சம்பவம் மராத்தி திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story