ஜல்லிக்கட்டில் மாடு உதைத்து வாலிபர் பலியான சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது


ஜல்லிக்கட்டில் மாடு உதைத்து வாலிபர் பலியான சம்பவத்தில் கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2018 3:52 AM IST (Updated: 23 Jan 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டில் மாடு உதைத்து வாலிபர் பலியான சம்பவத்தில் ஆள்மாறாட்டம் செய்ததாக கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் கடந்த 20-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது களத்தில் இருந்த மாடுபிடி வீரர் ஒருவர் ஒரு மாட்டை பிடித்துச் சென்ற போது மாடு மார்பில் உதைத்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22) என்பது தெரிய வந்ததை அடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் இறந்த ரஞ்சித்தின் பெயர் மாடுபிடி வீரர்களின் பட்டியலில் இடம் பெறாத நிலையில் உடல் தகுதி பரிசோதனையும் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

கல்லூரி மாணவர் கைது

பின்னர் ரஞ்சித் அணிந்திருந்த பனியனில் உள்ள 204 என்ற எண்ணில் யார் உடல் தகுதி பரிசோதனைக்கு சென்றார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கோவை மாவட்டம் கோத்தனூரை சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத் (21) என்பவர் சென்றதும், அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருவதோடு காஜா மலையில் உள்ள மாமா வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக டோக்கன் பெற்று உடல் தகுதி பரிசோதனை செய்த பின்னர் போட்டியில் பங்கேற்காமல் பனியனை ரஞ்சித்திடம் வழங்கியதும் தெரியவந்ததை அடுத்து வெங்கடேஷ் பிரசாத் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து வாலிபர் ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும். ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற இந்த ஆள்மாறாட்டம் குறித்து திருச்சி கலெக்டர் ராஜாமணியும் விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story