அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2018 4:00 AM IST (Updated: 23 Jan 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை யாராலும் கைப்பற்ற முடியாது என்று ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொது கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் தஞ்சை துரை.வீரணன், திருவோணம் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.பி. கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தொடர்ந்து வளர்ச்சி அடையும்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஏழை குடும்பத்தில் பிறந்து சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாடுபட்டு உழைத்தவர். அதனால்தான் இன்றளவும் எம்.ஜி.ஆர் ஏழை-எளிய மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கம். இந்த மாபெரும் இயக்கத்தை எந்த குடும்பத்தாலும் கைப்பற்ற முடியாது. மேலும், தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அ.தி.மு.க தொடர்ந்து வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினி ஏன் கருத்து தெரிவிக்கவில்லை?

இதைத்தொடர்ந்து பேசிய கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், எம்.ஜி.ஆர் நாட்டு மக்களின் இதயத்தில் வாழ்ந்துவருபவர் அவர் திரையுலகிலும், அரசியலிலும் ஏழை-எளிய மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே சேவை செய்தார். இன்றைக்கு வெளிநாட்டுக்கு சென்று வரும்போதெல்லாம் நடிகர்கள் சிலர் அரசியல் கட்சி தொடங்க போவதாக பேட்டி அளிக்கிறார்கள். ஆன்மிக அரசியலை முன்னெடுக்க போவதாக கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் ஏன்? ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் விமர்சனத்திற்கு இன்றுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த கட்சியை தோற்றுவித்த எம்.ஜி.ஆர் குடும்ப அரசியல் செய்யும் அரசியல் வாதிகளின் மத்தியில் நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே பாடுபட்டார். அதன் வழிவந்த ஜெயலலிதாவும் ஆற்றலுடன் செயல்பட்டு அ.தி.மு.க.வுக்காக பாடுபட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அமைச்சர் துரைக்கண்ணு, கு.பரசு ராமன் எம்.பி., சி.வி.சேகர் எம்.எல்.ஏ, தலைமை கழக பேச்சாளர்கள் சிவசண்முகம், விஸ்வலிங்கம், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஒரத்தநாடு நகர செயலாளர் த.செல்வம் நன்றி கூறினார். 

Next Story