டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் பார்வையிட்டார்


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 24 Jan 2018 4:15 AM IST (Updated: 24 Jan 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. மணிமண்டபம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலையில் திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர், திருச்செந்தூர்- தூத்துக்குடி ரோட்டில் உள்ள சிவந்தி அகாடமி வளாகம், திருச்செந்தூர்- நெல்லை ரோட்டில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டார். எந்த இடத்தில் மணிமண்டபம் கட்டலாம்? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கணேஷ்குமார், மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், வருவாய் ஆய்வாளர் தாஹிர், கிராம நிர்வாக அலுவலர்கள் வேல்ஜோதி, கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விருந்தினர் மாளிகையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-.

தூத்துக்குடியில் கடந்த நவம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருச்செந்தூரில் தமிழக அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன் தொடர் நிகழ்வாக மணிமண்டபம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக இடங்களை பார்வையிட வந்தேன். மணிமண்டபம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். தொடர்ந்து ரூ.1½ கோடி மதிப்பீட்டில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப, திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

அவருடன் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆறுமுகநேரி நகர செயலாளர் அரசகுரு, மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, வேல் ஆதித்தன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story