சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்களை 15 நாட்களில் வெளியிடுவேன்


சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்களை 15 நாட்களில் வெளியிடுவேன்
x
தினத்தந்தி 24 Jan 2018 2:48 AM IST (Updated: 24 Jan 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

இரும்பு தாது முறைகேடு, அர்க்காவதி லே-அவுட் நிலம் விடுவித்தது தொடர்பாக சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்களை 15 நாட்களில் வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

மைசூரு,

மைசூருவில் நடந்து வரும் பரிவர்த்தனா யாத்திரையில் கலந்துகொள்வதற்காக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா மைசூருவில் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி சித்தராமையா தன் மீது இருக்கும் அனைத்து குற்ற வழக்குகளை மறைப்பதற்காகவும், அவற்றில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும் ஊழல் தடுப்பு படையை பயன்படுத்தி வருகிறார். தனது பாதுகாப்புக்காக தான் சித்தராமையா ஊழல் தடுப்பு படையை தொடங்கினார். இரும்பு தாது முறைகேடு, அர்க்காவதி லே-அவுட் நிலம் விடுவித்தது உள்பட பல்வேறு வழக்குகளில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதனை இன்னும் 15 நாட்களில் வெளியிடுவேன். அந்த ஆதாரங்களை வீடு, வீடாக வழங்குவேன்.

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி மகதாயி நதியில் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனால், கோவா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இதனை தடுத்து, தண்ணீர் திறந்து விட முடியாத நிலையை உருவாக்கி விட்டனர். மகதாயி நதியில் தண்ணீர் திறக்காததற்கு காங்கிரஸ் கட்சியினர் தான் காரணம். மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பெங்களூருவில் பா.ஜனதா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் யாரும் மகதாயி போராட்டக் காரர்கள் கிடையாது. அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான விவசாயிகள். பா.ஜனதா சார்பில் நடந்த பரிவர்த்தனா யாத்திரைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story