வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சாத்தியமா?


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது சாத்தியமா?
x
தினத்தந்தி 24 Jan 2018 3:24 PM IST (Updated: 24 Jan 2018 3:24 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டுப்பதிவு எந்திரம் தொடர்பான விமர்சனங்கள் எழும்போது, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ட்டுப்பதிவு எந்திரம் மீது நாட்டு மக்களுக்கு பல சந்தேகங்கள் எழுவது உண்டு. ‘சிப்’ பொருத்தப்பட்ட எலெக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு எந்திரத்தை, வெளியில் இருந்து விரும்பியவாறு கட்டுப்படுத்த முடியும் என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டும் நிலவுகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மீது அரசியல் கட்சிகள் உள்பட நாட்டு மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகிறது. ஓட்டுப்பதிவு எந்திரம் வேண்டாம். மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையே வேண்டும் என்ற கோரிக்கையும் ஆங்காங்கே எழத்தான் செய்கின்றன.

அமெரிக்கா போன்ற வளர்ந்தநாடுகள் தேர்தல் முறையில் இன்னும் ஓட்டுச்சீட்டு முறையையே கடைபிடிக்கும்போது, வளர்ந்து வரும் நமது நாடு ஓட்டுப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது விமர்சிக்கப்படுவது மட்டுமின்றி ஆளும் அதிகாரவர்க்கம் அதனை கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணமும் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. வாக்காளர் ஒருவர் ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்து தற்போது சிலிப் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டார் என்பது அந்த சிலிப்பில் இடம்பெற்று இருக்காது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டாலும் அவர் ‘நான் இந்த கட்சிக்குதான் ஓட்டுப்போட்டேன், ஆனால் எனது ஓட்டு வேறுஒரு வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது’ என்று கோர முடியாது.

மத்திய அரசு ஆதாரை அனைத்துக்கும் கட்டாயமாக்கி உள்ளது. அதே போல, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தேர்தல் கமிஷன் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தினால், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதுடன், கள்ள ஓட்டுப்போடுவதையும் முழுவதும் தடுக்கலாம். வாக்காளர் ஒருவர் தனது விரல் ரேகையை வைத்தால் மட்டுமே ஓட்டுப்பதிவு எந்திரம், பதிவு செய்ய அனுமதிக்கும். வேறு ஒருவர் வந்து மற்றொருவரின் பெயரில் ஓட்டுப்போட வரும்போது விரல் ரேகையை வைத்தால் அது இயங்காது. மாறாக, எச்சரிக்கை சமிஞ்கை கொடுக்கும் வகையில் ஓட்டுப்பதிவு எந்திரத்தை வடிவமைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தனியாக ஒரு கருவி பொருத்தி, அதில் விரல் ரேகையை பதிவு செய்து, அது அனுமதித்த பின்னர்தான் ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முடியும் இல்லாவிட்டால் வாசலிலேயே திருப்பி அனுப்பி விடமுடியும் என்ற நிலையை ஏற்படுத்தலாம்.

ஓட்டுப்பதிவு எந்திரம் தொடர்பான விமர்சனங்கள் எழும்போது, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. நமது நாட்டில் பொதுத்தேர்தலும், இடைத்தேர்தலும் பல்வேறு சர்ச்சைகளை சம்பாதித்து வருகின்றன.

இந்த நிலையில், புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓம்பிரகாஷ்ராவத் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர், ‘வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார். இது நாட்டு மக்களுக்கு புது நம்பிக்கையை தந்துள்ளது. அவர் ஏற்றுள்ள இந்த கோரிக்கையை செயல்படுத்த தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது சாத்தியமாகுமா? என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்காளர்கள் எப்படி பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக்கூடாதோ, அதே போல தேர்தல்களும் நியாயமான முறையில் நடைபெற வேண்டும். ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் கேலிக்கூத்தாக மாறிவிடக்கூடாது என்பதில் எப்போதும் தேர்தல் கமிஷன் உறுதியாக இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 25) தேசிய வாக்காளர்கள் தினம்.

-ஏ.எம்.கே. ஜாவித் மீரான் 

Next Story